ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்கின்றது தமிழரசுக் கட்சி.!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையில் போர்க் காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் சம்பந்தமாக எவ்வித முன்னேற்றமும் எட்டப்படாமை உள்ளடங்கலாக தமிழ் மக்களின் கரிசனைகள் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை வரவேற்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இருப்பினும் அரசு ஆட்சிப்பீடமேறி இரண்டு வருடங்கள் கடந்தும் புதிய அரசமைப்பு உருவாக்கம் உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமை குறித்து ஆழ்ந்த கவலையை இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளிப்படுத்தியுள்ளது.
ஜெனிவாவில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய அமர்வின்போது ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ தொடர்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை பிரதி உயர்ஸ்தானிகர் அவா டபோவினால் வாசிக்கப்பட்டது.
“ஆயுத மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச படையினராலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை. முக்கிய வழக்குகள் குறித்த குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைகின்றன” என்று சுட்டிக்காட்டிய அவர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி இன்னமும் பதிலின்றித் தொடர்கின்றது என்றும் கரிசனை வெளியிட்டார்.
இந்நிலையில், இது பற்றி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் செவ்வாய்க்கிழமை (நேற்று) அமர்வில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இலங்கையில் போர்க் காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் சம்பந்தமாக எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்றும், இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவித்தல், வலிந்து காணாமல் ஆக்கப்படல்கள், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட தமிழ் மக்களின் கரிசனைகளைச் சுட்டிக்காட்டியமையை வரவேற்கின்றோம்.
மாகாண சபைத் தேர்தல்கள் நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருக்கின்றன என்று கூறப்பட்டமையையும் அவதானித்துள்ளோம்.
இலஞ்சம், ஊழல் மற்றும் போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்ட பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்கின்றோம்.
இருப்பினும் ஆட்சிப்பீடமேறி இரண்டு வருடங்கள் கடந்தும் தமிழ் மக்கள் தொடர்பான எந்தவொரு விடயத்திலும், குறிப்பாக தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமது தேர்தல் வாக்குறுதிகளைக் கூட அரசு நிறைவேற்றவில்லை என்பதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம்.” – என்றுள்ளது.