கிரான்குளத்தில் தோணி கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு – மற்றுமொருவரைத் தேடும் பணி தீவிரம்
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காணாமல் போயுள்ள மற்றுமொரு மீனவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று (04) காலை சுமார் 10 மணியளவில் கிரான்குளம் கடற்கரையிலிருந்து மூவர் தோணியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடலில் மூழ்கி உயிரிழந்த 48 வயதுடைய மீனவரின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனை மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தோணி கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ள 48 வயதுடைய துரைசாமி முத்தையா என்பவரைத் தேடும் பணிகள் பிரதேச மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, விபத்தில் சிக்கிய மூவரில் ஒருவர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காணாமல் போயுள்ள துரைசாமி முத்தையா கிரான்குளம் மீன்பிடிச் சங்கத்தின் தலைவராக செயற்பட்டு வருவதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

