மலையகத்துக்கான புகையிரத பாதைகள் செப்பனிடும் பணிகள் தீவிரம்.!
மலையகத்துக்கான புகையிரத பாதைகள் செப்பனிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கம்பளை நாவலப்பிட்டியவிற்கான புகையிரத பாதை செப்பனிடும் பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளது. அதே போல் ஹட்டனில் இருந்து கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டன், நானுஓயா வரையிலான புகையிரத பாதைகள் வெகு விரைவாக செப்பனிடப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா புயலின் பின்னர் மலையக பகுதியில் பாரிய அளவில் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததால் தலைநகர் கொழும்பில் இருந்து பதுளை வரையிலான புகையிரத சேவைகள் தடைபட்டு இருந்தது.
தற்போது பதுளையில் இருந்து நானுஓயா வரையிலான புகையிரத சேவைகள் இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் மாதங்களில் பதுளையில் இருந்து கண்டி வரையிலான புகையிரத சேவைகள் இடம்பெறும் என நானுஓயா புகையிரத சேவைகள் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த பத்து மாதங்களாக மலையக பகுதியில் புகையிரத சேவைகள் தடைபட்டதால் புகையிரதம் ஊடாக பயணிக்கும் பயணிகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பாரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.
மலையக பகுதியில் உள்ள ஒரு சில புகையிரத நிலையங்கள் தவிர அதிக அளவில் உள்ள புகையிரத நிலையங்களில் உள்ள மேடைகளை உயர்த்த வேண்டும்.
சுமார் இரண்டு அடி உயரம் அதிகமாக உள்ளதால் புகையிரத பெட்டிகளில் பயணிகள் ஏறும் போது மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டன் அதற்கு அப்பால் உள்ள அனைத்து புகையிரத நிலையத்தில் உள்ள அனைத்து மேடைகளையும் உயர்த்த வேண்டும் என பாதிப்புக்கு உள்ளாகி வரும் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.



