9 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்திலிருந்து இருவர் உயிருடன் மீட்பு
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உருக்குலைந்த நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 26ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.
இதன்போது, போடே கோஷி மற்றும் திரிசூலி நதிகளுக்கு அருகிலுள்ள நீர்மின் நிலையங்களின் சுரங்கங்கள் சேதமடைந்ததில் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை மீட்கும் பணியில் நேபாள இராணுவத்தினர் கடந்த 9 நாட்களாக ஈடுபட்டு வந்ததுடன், இந்திய சுரங்க மீட்பு நிபுணர்களும் உதவி வருகின்றனர்.
இந்த நிலையில், திரிசூலி நீர்மின் திட்டத்தின் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சஞ்சய் ஷா மற்றும் கபீர் மகாராஜன் ஆகிய இருவரை இன்று காலை நேபாள இராணுவத்தினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இருவரும் இராணுவ வைத்தியசாலைக்கு ஹெலிக்கொப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சுவாசிக்கத் தேவையான ஒக்சிஜன் குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன.
9 நாட்களுக்குப் பின்னர் இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது, காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது