செஞ்சோலை படுகொ*லையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.!
வடக்குக் கிழக்கிலே பெருமளவு முதலீடுகளைச் செய்ய இந்தியா முன்வந்திருக்கின்றது. ஆனால் இந்த அரசாங்கம் அதற்குத் துணையாக இல்லை. அவர்கள் இரண்டு முகத்தைக் காட்டுகின்றார்கள். சைனாவுக்கு ஒரு முகம், இங்கே இந்தியாவுக்கு ஒரு முகத்தைக் காட்டி, மாறாக எங்களுடைய தமிழர்களைத் தொடர்ச்சியாக நசுக்கிக் கொண்டு வருகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் கடந்த 2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் திகதி செஞ்சோலை வளாகத்தின் மீது இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவச் செல்வங்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (14.08.2026) மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் மிக உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
முல்லைத்தீவு – செஞ்சோலையில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர். செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மாவீரர் குடும்ப உறுப்பினர் ஒருவரால் பிரதான சுடர் ஏற்றி வைக்கப்பட்டு பின்னர் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன், திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் க.குகன், திருகோணமலை மாவட்ட நிர்வாக சபை உறுப்பினர் அகிலன், பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தேசிய அமைப்பாளர்,
இந்த மாணவர்களை விடுதலைப் புலிகள் அல்லது அவங்களுடைய பாஷையிலே சொல்லப் போனால் அவர்கள் பயங்கரவாதிகள் என்ற விடயத்தை இந்த சர்வதேச அரங்குக்கு அரங்கேற்றுவதற்காக அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சு, இலங்கையினுடைய வெளியுறவுத்துறை அமைச்சு மிக பொய்யான கதைகளைக் கட்டி விடயங்களை வெளியே கொண்டுவர முயன்றார்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தில் அன்றைய அந்தத் தொண்டு நிறுவனங்கள் அங்கே இருந்தது. அந்தத் தொண்டு நிறுவனங்கள், இல்லை, இந்த மாணவச் செல்வங்கள் இவர்கள் வெறும் தலைமைத்துவப் பயிற்சிக்காக வந்திருந்தவர்கள், இவர்கள் மீது வீணாகக் குண்டடிக்கப்பட்டு இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்’ என்ற விடயம் அந்தத் தொண்டு நிறுவனங்கள் வெளியே கொண்டுவந்ததனால் தான் அந்த உண்மை சர்வதேசத்திற்குத் தெரியவந்தது.
இவ்வாறு எமது மண்ணிலே பல படுகொலைகள் நடந்தேறியிருக்கின்றது. கடந்த 77 வருடங்களாக எங்களுடைய இனம் படுமோசமாக இனவெறியாட்டத்திற்கு உட்பட்டு, சிங்கள பேரினவாத பூதம் தொடர்ந்தும் வந்தே இந்த இலங்கைத் தீவை சிங்கள பௌத்த பூமியாக மாற்றுவதற்காக அவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்கள்.
1956-ஆம் ஆண்டு எங்களுடைய தலைவர்கள், தமிழ் தலைவர்கள் தாக்கப்பட்டார்கள். 1974-ஆம் ஆண்டு தமிழர் ஆராய்ச்சி மாநாட்டிலே எங்களுடைய தலைவர்கள் அடித்துக் கொல்லப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள். அதேபோன்று தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த ஒவ்வொரு படுகொலைகளும் எங்களை, எங்களுடைய இளைஞர்களை, யுவதிகளைக் குறிவைக்கப்பட்டு அவர்கள் தாக்கி அழிக்கப்பட்டார்கள். சிங்கள பேரினவாதத்தினுடைய அந்த உச்ச சிந்தனை என்பது, இந்த நாடு ஒரு சிங்கள பௌத்த பூமி, இதிலே சிங்கள மக்களைத் தவிர அல்லது சிங்கள ஆட்சியாளர்களைத் தவிர வேறு யாரும் வந்து இங்கே வந்து அவர்களுக்குச் சமமாகவோ அல்லது அவர்களுடைய உரிமைகளை அனுபவிக்கவோ கூடாது என்ற மனநிலையோடு தொடர்ந்தும் அவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள்.
நாங்கள் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம்; நாங்கள் எங்களுடைய மக்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு விதமான போராட்டங்களை இந்த மண்ணிலே செய்திருக்கின்றோம். எங்களுடைய மக்கள் அவர்களுடைய மரபுவழித் தாயகத்திலே எங்களுடைய சொந்த மொழியாக இருக்கின்ற தமிழ் மொழியைப் பேசிக்கொண்டு, அவர்களுடைய கலை கலாச்சாரத்தைப் பேணிக்கொண்டு, அவர்களுடைய வாலிப இடங்களைத் தக்கவைத்துக்கொண்டு கடந்த 77 வருடங்களாகப் போராடி வருகின்றார்கள்.
இந்தச் சிங்கள தேசம், சிங்கள ஆட்சியாளர்கள் அதைச் சிதறடித்துவிட்டு, இன்றைக்கும் கூட அவர்கள் இதொரு தங்களுக்குரிய பூமி, இதிலே பௌத்தத்திற்குத்தான் முன்னுரிமை என்ற அடிப்படையிலே அவர்களுடைய சிந்தனை இருக்கின்றது. இது ஒருநாளும் இந்த நாட்டை மீட்கப்போவதில்லை. இந்த நாட்டை ஆண்டிருக்கின்ற கடந்த எட்டு ஜனாதிபதிகளும் அதே மனநிலையோடுதான் இருந்தவர்கள். இன்றைக்கு வந்திருக்கின்ற அநுரகுமார திசாநாயக்க அவர்களும் அதே மனநிலையோடுதான் இருக்கிறார். தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, இங்கே இருக்கிற இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர்கள் எந்த வழியிலும் தயாரான ஒரு நிலையிலே இல்லை.
இங்கே இந்த நாட்டிலே சட்டத்தை இயற்றுகின்ற ஒரு அரசியலமைப்பு, அது தமிழர்களையும் முஸ்லிம் மக்களைப் பொறுத்தமட்டிலே அவர்களை ஒடுக்குகின்ற ஒரு அரசியலமைப்பாக இருக்கின்றது. அது ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பாக இருக்கின்றது. பல இன மக்கள் வாழுகின்ற இந்த நாட்டிலே அந்த அரசியலமைப்பு வந்து ஒரு சமஷ்டிக் கட்டமைப்பாக மாற்றப்பட வேண்டும் என்று எங்களுடைய போராட்டம் நடைபெறுகின்றது. அந்தப் போராட்டத்திற்கு எந்தவிதமான கரிசனையும் கொள்ளாது, எந்தவிதமான முன்னுரிமையும் கொடுக்காது, இந்த நாட்டிலே தங்களுடைய, எந்தக் கட்சி வந்தாலும் தாங்கள்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்றொரு மனநிலையோடும், தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும் என்ற மனநிலையோடும் தான் தொடர்ச்சியாக அந்தப் பெரும்பான்மைக் கட்சிகள் ஆட்சிகளை நடத்தி வருகின்றார்கள்.
எங்களைப் பொறுத்தமட்டிலே இந்த நாடு கடன் சுமைக்குள்ளே மிகவும் மோசமான நிலையிலே விழுந்திருக்கின்றது. இந்த நாடு சிங்கப்பூர் போல அல்லது அதைவிடப் பலமடங்காக வளர்ச்சியடைய முடியும். ஆனால் இங்கே இருக்கிற தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் இது எந்த விதத்திலும் சாத்தியமில்லை. இன்றைக்கு இருக்கிற அநுரகுமார திசாநாயக்க அவர்கள் இந்த ஊழல் ஒழிப்பு சம்பந்தமான, கள்வர்களைப் பிடிக்கின்ற நல்ல விடயங்களைச் செய்கின்றார், நாங்கள் அதை வரவேற்கின்றோம். நாங்கள் அதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் கிடையாது.
ஆனால் நீங்கள் அவ்வாறு செய்துகொண்டு தமிழர்களுடைய பூமியிலே தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்புகளைச் செய்வதன் நோக்கம் என்ன? உங்களுடைய உள்நோக்கம் என்ன? இன அழிப்பைச் செய்வது, இந்த நாட்டிலே நடந்த அத்தனை விடயங்களும் அத்தனை ஜனாதிபதிகளுடைய உள்நோக்கமாக இந்த நாட்டிலே தமிழர்களுடைய நிலத்தைப் பறித்து, அவர்களை ஒரு சிறுபான்மையினமாகத் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தி வைத்திருக்கின்ற அந்த மனநிலையில்தான் இன்றைக்கு இருக்கிற ஜனாதிபதியும் இருக்கின்றார்.
ஆகவே எங்களைப் பொறுத்தமட்டிலே எங்களுடைய தமிழர்கள், எங்களுடைய மக்கள் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். நாங்கள் சிங்கள மக்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எவ்வளவு போராட்ட நெருக்கமாக இருந்த கால சந்தர்ப்பத்திலும் சிங்கள மக்களுக்கு நாங்கள் எவ்விதமான போராட்டங்களையும் செய்யவில்லை, அவர்களுக்கு எதிராக நடந்ததும் கிடையாது. ஆனால் இந்த அரசினுடைய காவல் படைகள், இன்றைக்கு இருக்கின்ற இராணுவ வீரர்கள் இந்த வடக்குக் கிழக்கிலே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற இவர்கள் தொடர்ச்சியாக போராட்டக் காலப்பகுதியிலும் சரி, இந்தக் காலப்பகுதியிலும் சரி எங்களுடைய மக்களை அடிமைப்படுத்துகின்ற செயற்பாட்டிலே இருக்கின்றார்கள்.
குறிப்பாக இங்கே நடைபெறுகின்ற நில ஆக்கிரமிப்புகள் குறிப்பாக தையிட்டிலே ஆக்கிரமிப்பு நடக்கிறது, இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக இந்தப் போராட்டங்கள் நடந்து வருகின்றது. யுத்தம் முடிவடைந்திருக்கின்றது என்று சர்வதேச மட்டத்திற்கு இந்த ஜனாதிபதி, இந்த அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழர்களுடைய பல்லாயிரக்கணக்கான காணிகளை பலாலி, மயிலிட்டி, தையிட்டி, மணலாறு போன்ற இடங்களிலே அபகரித்து தங்களுடைய கட்டுப்பாட்டிலே வைத்திருக்கின்றார்கள். இதன் நோக்கம் என்ன? இந்த நோக்கம் எங்களுடைய இனத்தை அழிப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஆகவே தொடர்ச்சியாக எங்களுடைய மக்கள் வீதியிலிறங்கிப் போராடுகின்றார்கள். இன்றைக்கு மட்டக்களப்பிலிருக்கின்ற மயிலத்தமடு, மாதவனை நில மீட்பு தொடர்பாகப் போராட்டம் நடக்கின்றது. எல்லா இடங்களிலும் எங்களுடைய மக்கள் போராடுகின்றார்கள். ஆகவே சர்வதேசம் உற்று நோக்க வேண்டும். நாங்கள் நம்பியிருப்பது இந்தியாவை. இந்தியா வந்து எங்களுக்குக் கை கொடுக்க வேண்டும். இன்றைக்கு இந்த வடக்குக் கிழக்கிலே பெருமளவு முதலீடுகளைச் செய்ய இந்தியா முன்வந்திருக்கின்றது. ஆனால் இந்த அரசாங்கம் அதற்குத் துணையாக இல்லை. அவர்கள் இரண்டு முகத்தைக் காட்டுகின்றார்கள். சைனாவுக்கு ஒரு முகம், இங்கே இந்தியாவுக்கு ஒரு முகத்தைக் காட்டி, மாறாக எங்களுடைய தமிழர்களைத் தொடர்ச்சியாக நசுக்கிக் கொண்டு வருகின்றார்கள்.
ஆகவே அன்றிலிருந்து இன்று வரைக்கும் நாங்கள் இந்தியாவை நம்பியிருக்கின்றோம். அயல்நாடாக இருக்கின்ற எங்களுடைய தொப்புள்கொடி உறவாக இருக்கின்ற தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை, தலைவர்களை நம்பியிருக்கின்றோம். அங்கே ஏழரைக்கோடி மக்கள் எங்களுடைய தமிழ் தொப்புள்கொடி உறவுகள் இருக்கின்றார்கள். நாங்கள் அந்த மக்களுடைய பலத்திலே இந்த இலங்கைத் தீவிலே அவர்களை நம்பித் வாழுகின்றோம். எங்களுடைய நிலைப்பாட்டின்படி அந்தத் தமிழர்கள் நிச்சயமாக இந்த இலங்கைத் தீவிலே வாழுகின்ற தமிழர்களைப் பாதுகாப்பதற்காக அவர்களுடைய கரங்களை இங்கே எங்களுக்கு நீட்டுவதற்காக இருக்கின்றார்கள்.
ஆகவே, இந்தியாவினுடைய மத்திய அரசு இந்த விடயத்திலே கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவினுடைய ஆதரவை நாங்கள் முழுமையாகக் கோரி நிற்கின்றோம். ஆகவே இன்றைய சூழ்நிலையிலே எங்களுக்கு எங்களுடைய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு இந்த நாட்டிலே நாடாளுமன்றத்திலே சட்டத்தை இயற்றுகின்ற ஒரு அரசியலமைப்பு, ஒற்றையாட்சி அரசியலமைப்பு இருக்கின்றது. அந்த அரசியலமைப்பை மாற்றாமல் இங்கே நடக்கின்ற காணி அபகரிப்புகளை நாங்கள் மீட்க முடியாது. எங்களுடைய சகல இடங்களிலும், கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் தென்னமரவடியிலே பிள்ளையார் கோயில் இருந்த இடத்திலே, பிள்ளையார் சிலை இருந்த இடத்திலே புத்த விகாரை கட்டப்படுகிறது. அதேபோன்று அங்கே குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலே விகாரைகள் கட்டப்படுகின்றது. அதேமாதிரி இங்கே மட்டக்களப்பு மாவட்டத்திலே தாந்தாமலை போன்ற இடங்கள் குறிவைக்கப்படுகிறது, எங்களுடைய கலாச்சார இடங்கள் குறிவைக்கப்படுகிறது.
ஆகவே இதன் நோக்கங்கள் முழுக்க முழுக்க எங்களுடைய இனத்தைத் தொடர்ந்து அழிப்பதுதான். ஆனால் இந்தச் சிங்கள தேசத்திற்கு நான் இந்த இடத்திலே ஒரு சவாலை விடுக்கின்றேன். நீங்கள் என்னதான் சுற்றி யாரைப் பிடித்தாலும், எந்த சர்வதேச நிதியங்களைப் பிடித்தாலும் இந்த மண்ணிலே இருக்கின்ற இந்த இலங்கைத் தீவிலே இருக்கின்ற இந்த இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் இந்த நாட்டை நீங்கள் கட்டியெழுப்ப முடியாது.
அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நீங்கள் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் என்னவென்பதை நீங்கள் புரிந்துகொண்டு அதற்குரிய விதமாக நீங்கள் உங்களுடைய காய்களை நகர்த்த வேண்டும் என்பதையும் கூறிக்கொண்டு விடைபெறுகின்றேன் என்றார்.






