கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை
மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது.
பஸ்பாகே கோரலை பிரிவில் நாவலப்பிட்டி பகுதியில் அதிக அளவில் கன மழை பெய்து வருகிறது இதனால் பஸ்பாகே கோரலை பிரிவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிக்கபட்டு வருகின்றனர்
நாவலப்பிட்டி நகரில் உள்ள கம்பளை வீதி மற்றும் பொது பேருந்து நிலையம் வெள்ள நீருடன் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பயணிகள் பாதசாரிகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்கள் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சாரதிகள் நடத்துனர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா ஹட்டன் நகரில் இரு வேறு பகுதியில் கழிவு நீர் மற்றும் மழை நீர் வடிந்து செல்ல முறையான வடிகால் அமைப்பு இல்லாத நிலையில் டண்பார் பகுதியில் உள்ள மழைநீர் கழிவு நீர் கலந்த வெள்ளம் பள்ளத்தாக்கு வழியாக பேருந்து நிலைய வழியாக கால்வாய்கள் நிரம்பி வீதியில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் புகையிரத நிலைய நுழைவாயில் பகுதியில் இருந்து ஹட்டன் மல்லியப்பூ சந்திவறை செல்லும் பிரதான சாலையில் கழிவு நீர் கலந்த மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து கால்வாய் நிரம்பி வீதியில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஹட்டன் நகருக்கு வரும் மக்கள் பாடசாலை மாணவர்கள் நோயாளிகள் கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்கள் முதியோர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மத்திய மாகாணத்தில் கண்டி நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது அதிக அளவில் பனிமூட்டம் நிலவி வருகிறது இந்த நிலையில் நுவரெலியா கண்டி, நுவரெலியா ஹட்டன், ஹட்டன் கொழுப்பு, ஹட்டன் கண்டி, ஹட்டன் கினிகத்தேன, ஹட்டன் மஸ்கெலியா ஹட்டன் நோட்டன்,ஹட்டன் டயகம, ஹட்டன் பொகவந்தலாவ, ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வாகன சாரதிகளும் வாகனங்களை செலுத்தும் போது வாகனங்களில் உள்ள மின் குமிழ்களை மிளிர செய்து வாகனங்களை ஓட்டி செல்லுமாறு ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது மவுசாக்கலை காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டி நிலையில் உள்ளது கென்யோன் புரோட்லேன்ட் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப் படுகிறது என நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் கண்டி நுவரெலியா மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்