நவாலி முருகானந்த சனசமூக நிலையத்தின் 7 ஆவது ஆண்டு விழா.!
நவாலி முருகானந்த சனசமூக நிலையத்தின் 7 ஆவது ஆண்டு விழாவானது நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வானது ஆனைக்கோட்டை மூத்த நயினார் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பித்தது. இதன்போது எருதுகள் பூட்டிய வண்டில் முன்னே செல்ல அதனைத் தொடர்ந்து பவனி இடம்பெற்றது. இந்த பவனியின்போது மங்கல வாத்திய இசை, இனியம் இசை, பறை இசை, காவடியாட்டம், கோலாட்டம், பாரம்பரிய சிலம்பாட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் இடம்பெற்றன.
பவனியானது குறித்த சனசமூக நிலைய வளாகத்தை அடைந்தது. இதன்போது அங்கே ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட பாரம்பரிய விடயங்களின் கண்காட்சிகள் இடம்பெற்றன. இந்த கண்காட்சியில் மா இடித்தல், பன்ன வேலை, அம்மி அரைத்தல், சூடடித்தல், உரல் இடித்தல், பல்லாங்குழி – தாயம் விளையாடுதல், ஆட்டுக்கல் ஆட்டுதல் என பல விடயங்கள் உள்ளடங்கின. அத்துடன் பாரம்பரிய பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
அதனை அனைவரும் பார்வையிட்ட பின்னர் சிலம்பாட்டம், வாள் சண்டை போன்ற தற்காப்பு கலை கண்காட்சி இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அந்தவகையில் கலை கலாச்சார நடனங்கள், நாடகங்கள், விருந்தினர்கள் உரைகள் என்பன இடம்பெற்றன. அதனை தொடர்ந்து விருதுகள் மற்றும் பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன.
சனசமூக நிலையத்தின் தலைவர் வே.டிலக்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதகுருக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக மட்ட அமைப்பினர், கல்விமான்கள், இளைஞர் – யுவதிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.









