நீர்கொழும்பு சிறை வன்முறை அறிக்கை அநுரவிடம் சமர்ப்பிப்பு.!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த மாதம் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார இந்தத் தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த மாதம் 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதலில் 22 கைதிகளும், 10 அதிகாரிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் 21 அதிகாரிகள் மற்றும் 106 கைதிகள் படுகாயமடைந்தனர்.
மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டுவிட்டன. எனினும், பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட கூடுதல் சாத்தியமான நடவடிக்கைகளை ஆராய்வதற்காகவே விசேட ஜனாதிபதி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் ஊடாக உயிரிழந்த மற்றும் காயமடைந்த அதிகாரிகளுக்கான இழப்பீடு, ஓய்வூதியம் வழங்குதல், அவர்கள் பெற்ற கடன்கள் தொடர்பில் தீர்வு காணுதல் மற்றும் காயமடைந்தவர்களின் முழுமையான இயலாமை நிலை குறித்து விசாரித்துத் தகுந்த பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளன.” – என்றார்.