அநுருத்த பண்டாரவை கைது செய்தமை அடிப்படை உரிமை மீறல்! – தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், சமூகச் செயற்பாட்டாளர் அநுருத்த பண்டாரவைச் சட்டவிரோதமாகக் கைது செய்து தடுத்து வைத்தமையின் ஊடாக அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டங்களின்போது, தன்னைச் சட்டவிரோதமாகக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தமைக்கு எதிராக அநுருத்த பண்டார உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அநுருத்த பண்டாரவைக் கைது செய்து தடுத்து வைத்திருந்த செயற்பாடானது அரசமைப்பின் மூலம் அவருக்கு உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், இந்தச் சட்டவிரோதக் கைது மற்றும் தடுப்புக் காவல் நடவடிக்கைகளுக்கு அப்போதைய மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் அப்போதைய பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோரின் நடவடிக்கைகளே நேரடிக் காரணம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.