ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா உள்ளதா? களமிறங்கிய CIA!
பாரசீக வளைகுடாவில் உள்ள சிஐஏ (CIA) தளங்கள் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களின் போது, இலக்கு குறித்த தகவல்களையோ அல்லது மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தையோ வழங்கி ரஷ்யா உதவி செய்ததா என்பது குறித்த விசாரணைகளை அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
இந்த தகவலை அமெரிக்க உளவுத்துறை விவகாரங்கள் தெரிந்த நான்கு பேர் தெரிவித்தனர்.
தேசியப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்காகத் தங்கள் பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள் சிஐஏ (CIA) வளாகங்கள் மீதான தாக்குதல்களில் ரஷ்யாவின் பங்கு இருக்கலாம் என்பது குறித்து அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை என்று கூறினர்.
இருப்பினும், அத்தாக்குதல்களின் வீரியம் மற்றும் துல்லியம், அத்துடன் ஈரானுக்கு ரஷ்யா அளித்து வரும் பரந்த அளவிலான தொழில்நுட்ப ஆதரவு ஆகியவற்றை அவர்கள் இதற்கான சாத்தியமான சான்றுகளாகச் சுட்டிக்காட்டினர்.
வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீதான தாக்குதல்களில் ஈரானுக்கு இலக்கு நிர்ணயித்தல் மற்றும் பிற வகையிலான உதவிகளை ரஷ்யா வழங்கியுள்ளது என்பதை ரொய்ட்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிகாரிகளும் இதனை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இருப்பினும், சிஐஏ (CIA) முகாம் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவளிப்பதில் ரஷ்யாவின் பங்கு ஏதேனும் உள்ளதா என்பது குறித்த உளவுத்துறையின் விசாரணை விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.