நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூர வன்முறைச் சம்பவங்களின் முழுமையான பொறுப்பை நாட்டின் ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:-
“இன்று காலை நிலவரப்படி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் 20 கைதிகளும் 7 அதிகாரிகளும் என மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தான, பயங்கரமான ஒரு சூழ்நிலையாகும். ஊடகங்கள் வாயிலாகக் காணக்கிடைத்த காட்சிகள் மிகவும் அருவருப்பானவை.
ஒரு நாடு என்ற ரீதியில், இந்தச் சம்பவமானது இலங்கையை சர்வதேச அரங்கில் ஒரு காட்டுமிராண்டித்தனமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இவ்வாறானதொரு செய்தி உலகுக்குச் செல்லும்போது இலங்கைக்கு முதலீட்டாளர்கள் வருவது பாதிக்கப்படுவதுடன், இனிவரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கூட பாரிய கேள்விக்குறியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் நீதித்துறை, சட்ட அமலாக்கக் கட்டமைப்பு மற்றும் சிறைச்சாலை முறைமைகளில் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினைகள் அனைத்தையும் மூடிமறைத்துவிட்டு, தங்களுக்குச் சாதகமான உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடித்து, அவர்களைத் திருப்திப்படுத்தி, தங்களுக்குத் தேவையான தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரு கேவலமான முயற்சியிலேயே ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத, மிகவும் நேர்மையான மற்றும் திறமையான அதிகாரியாகக் கருதப்பட்ட துஷார உபுல்தெனிய சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஜே.வி.பி.யின் ஆதரவாளர் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
துஷார உபுல்தெனியவை நீக்கியமை சட்டவிரோதமானது எனவும், எனவே அவரை மீண்டும் பதவியில் அமர்த்துமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டிருந்த போதிலும், நீதி அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேன அந்த உத்தரவைப் புறந்தள்ளி, அரசுக்குத் தேவையானவாறு செயற்பட்டு வருகின்றார். அரசின் தேவைகளைப் பூர்த்தி செய்து அதன் மூலம் உயர் நீதிமன்றத்தில் தனக்கான ஒரு பதவியைப் பெற்றுக்கொள்ளவே அவர் முயற்சிக்கின்றார்.
இதன் விளைவாக நாட்டின் நீதித்துறை முழுமையாக அழிவை நோக்கிச் சென்றுள்ளதுடன் சட்டத்தின் ஆட்சியும் முற்றாகச் சீர்குலைந்துள்ளது. தங்களுக்குத் தேவையான தீர்ப்புகளைப் பெறுவதற்கும், தங்களுக்கு வேண்டிய நீதியரசர்களை நியமிப்பதற்கும், அவர்களின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கும் இந்த அரசு எடுக்கும் முயற்சிகள் உலக அரங்கில் இலங்கையை ‘சட்டத்தின் ஆட்சி இல்லாத ஒரு நாடு’ என முத்திரை குத்த வழிவகுக்கும்.
இந்த அரசு கடந்த காலங்களில் நாட்டில் ஏதேனும் ஒரு பிரச்சினை எழும்போது, அதைவிடப் பெரியதொரு பிரச்சினையை உருவாக்கி முந்தைய பிரச்சினையை மூடிமறைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளது.
மகா திறைசேரி கொள்ளை இடம்பெற்ற போதும், நபரொருவர் கழுத்தறுபட்டு இறந்த போதும் அவையெல்லாம் அவ்வாறே அமுக்கப்பட்டுவிட்டது.
அதேபோல் நிலக்கரி ஊழல் வெளிவந்தபோது, எவ்வித காரணமுமின்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டதன் மூலம் அது நாட்டின் பிரதான தலைப்பாக மாற்றப்பட்டு, நிலக்கரி ஊழல் மூடிமறைக்கப்பட்டது.
இவ்வாறு நாட்டில் ஒரு பிரச்சினை வரும்போது அரசே திட்டமிட்டு அதைவிட பாரதூரமான வேறொரு பிரச்சினையை உருவாக்கி மக்களைத் திசைதிருப்பும் அற்பத்தனமான உத்தியையே ஆரம்பத்திலிருந்தே கையாண்டு வருகின்றது.” – என்றார்.










