நறுவிலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் எம்.பி.!
அதிகமான பௌதீக வளப் பற்றாக்குறைகள் மற்றும் ஆளணிப் பற்றாக்குறைகளால் நலிவடைந்துள்ள மன்னார் – நறுவிலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு நேரில் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்வாறு நலிவுற்றுள்ள நறுவிலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பௌதீகவளப் பற்றாக்குறைகள் மற்றும் ஆசிரிய ஆளணிப் பற்றாக்குறைகளைத் தீர்ப்பது தொடர்பில் தம்மால் விசேடமாக கவனம் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார் – நறுவிலிக்குளம் அ.த.க பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், நலன்புரிச் சங்கத்தினர் ஆகிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த பாடசாலையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைகள் மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், நேரடியாகவும் பார்வையிட்டார்.
இந்நிலையில் குறித்த பாடசாலையில் 8 ஆசிரிய ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இவ்வாறான ஆசிரிய ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதனால் மாணவர்கள் தாம் விரும்பிய தொகுதிப் பாடங்களைக் கற்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் இதன்போது முறையிடப்பட்டது. அதற்கமைய தொகுதி – 1 இல் புவியியல் பாடத்தை மாத்திரமும், தொகுதி – 2 இல் சங்கீத பாடத்தை மாத்திரமும், தொகுதி – 3 இல் சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை மாணவர்கள் வேறு வழியின்றி கட்டாயமாக கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேவேளை குறித்த நறுவிலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு கல்வியியல் கல்லூரியில் இருந்தான புதிய ஆசிரியர் நியமனங்கள் நீண்டகாலமாக மேற்கொள்ளப்படவில்லை என்பதும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
அத்தோடு குறித்த பாடசாலையில் 60ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய வகுப்பறைத் தொகுதியே இன்றளவும் பாவனையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், போதுமான அளவு வகுப்பறை வசதிகள் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த பாடசாலையில் தற்போது தரம் 06 தொடக்கம் 11வரையான இடைநிலைப்பிரிவு மாணவர்கள் பிரிக்கப்படாத ஒரே வகுப்பறைத் தொகுதியில் தமது கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பிரிக்கப்படாத ஒரே வகுப்பறைத் தொகுதியில் அருகருகே வெவ்வேறு வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்கள் இருப்பதால் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் பாரிய சவால் நிலைகள் காணப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு போதுமான அளவு கட்டுமான வசதிகள் இன்மையால் சுகாதாரமும் உடற்கல்வியும் பாடத்திற்கான அறையும், விஞ்ஞான ஆய்வுகூடமும் ஒரே அறையில் இயங்கி வருகின்றன. அதேபோல் கிறிஸ்தவப் பாடத்திற்கான அறையும் நூலகமும் ஒரே அறையில் இயங்கி வருகின்றன. அதுதவிர பாடசாலையில் ஒரே ஒரு திறன் வகுப்பறை காணப்படுகின்ற நிலையில் அந்த திறன் வகுப்பறையினையே அனைத்து வகுப்பினரும் சுழற்சி முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.
அத்தோடு இப்பாடசாலையில் ஆசிரியர்களுக்கான ஓய்வறையும் இல்லாத நிலையில் காணப்படுகின்றது.
அதேவேளை பாடசாலையில் போதுமான தளபாட வசதிகள் இன்மையாலும் மாணவர்களும், ஆசிரியர்களும் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்பதற்குரிய போதுமான இருக்கை வசதிகள் இன்மையால், மாணவர்கள் நெகிழி ( பிளாஸ்டிக்) இருக்கைகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பாடசாலையில் போதுமான விளையாட்டு உபகரணங்கள் இல்லாத நிலை காணப்படுவதாதவும், பாடசாலைக்கு குடிநீர் இணைப்பின்மையால் மாணவர்கள் குடிநீரை வீடுகளில் இருந்தே எடுத்து வரவேண்டிய நிலை காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
மேலும் குறித்த பாடசாலையில் போதுமான மலசலகூட வசதிகள் இன்மையால் மாணவர்களும், ஆசிரியர்களும் ஒரே மலசலகூடங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலையும் காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இதன்போது முறையிடப்பட்டது.
இவ்வாறாக சகலவிதத்திலும் இப்பாடசாலை குறைபாடுகளுடன் காணப்படுவதால் பெருமளவான மாணவர்கள் அயற்பாடசாலைகளை நாடுவதாகவும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இதன்போது கவலை தெரிவித்தனர்.
அத்தோடு இப்பாடசாலையில் காணப்படும் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இதன்போது பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த நறுவிலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் காணப்படும் குறைபாடுகளைத் தீர்ப்பது தொடர்பில் தம்மால் விசேட கவனம் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த கள விஜயத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜான்சன் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






