முத்தரிப்புத்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு நேரில் சென்ற ரவிகரன் எம்.பி.!
மன்னார் – முத்தரிப்புத்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு நேரில் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த பாடசாலையில் காணப்படும் பொதீக வளப் பற்றாக்குறைகள் மற்றும் ஆளணி வளப் பற்றாக்குறைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
குறிப்பாக பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர், பாடசாலையில் காணப்படும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அந்தவகையில் குறித்த பாடசாலையில் உயர்தரப் பாட ஆசிரிய ஆளணி பற்றாக்குறைகள் காணப்படுவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பாக தமிழ், அரசியல் விஞ்ஞானம், கிறிஸ்தவ நாகரீகம் ஆகிய உயர்தரப் பாடங்களுக்கே ஆளணிப் பற்றாக்குறைகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு ஆரம்பப் பிரிவிற்கு 02 ஆசிரிய ஆளணி தேவைப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் இதன்போது முறையீடு செய்யப்பட்டது.
இவ்வாறு ஆரம்பப் பிரிவிற்கு போதுமான ஆசிரிய ஆளணி இன்மையால், 35 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பிரிக்கப்படாத ஒரே வகுப்பாக இயங்குவதாகவும், அதனால் கற்பித்தல் செயற்பாடுகளின் போது பாரிய சாவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேவேளை குறித்த பாடசாலையில் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்குப் போதுமான வளங்கள் இல்லாதபோதும், மாகாணத்தில் இந்தப் பாடசாலையின் பெண்கள் அணியினர் முதல் நிலையிலுள்ளதுடன், வலயத்தில் இப்பாடசாலையின் ஆண், பெண் இரு அணிகளும் முதல் நிலையில் இருப்பதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டதுடன், பாடசாலையின் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்கான போதுமான வளங்களை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் விஞ்ஞான ஆய்வுகூடச் சீரமைப்பு, நூலகச் சீரமைப்பு, தொழில்நுட்ப ஆய்வுகூடத்திற்கு போதுமானதற்ற தொழில்நுட்ப சாதனங்கள், தரம் 01இற்குரிய கல்வி மறுசீரமைப்பிற்கான தொழில்நுட்ப சாதனங்கள் இன்மை, திறன் வகுப்பறையுடனான இலத்திரனியல் கற்கைக்குரிய போதுமான வளம் இன்மை, மலசலகூட சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளும், குறைபாடுகளும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் கோரிக்கைகளையும், குறைபாடுகளையும் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த பாடசாலையில் காணப்படும் வளப் பற்றாக்குறைகளைச் சீர்செய்வது தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.






