யாழில் காலாவதியான பிஸ்கெட்டை விற்பனை செய்ய முயன்றவருக்கு தண்டம்.!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியில் செயல்படும் உணவு கையாளும் நிலையங்களில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது பல்பொருள் அங்காடி ஒன்றில் காலாவதியான பிஸ்கட் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றம் முன் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது உரிமையாளர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றம் அவரை கடுமையாக எச்சரித்து25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
மேலும், கடந்த வாரமும் அச்சுவேலி பகுதியில் உள்ள மற்றொரு உணவு கையாளும் நிலையத்திற்கு 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அச்சுவேலி பகுதியில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் தொடர்ந்து திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.