மனித உரிமைகள் தொடர்பில் இலங்கைக்கு நோர்வே எச்சரிக்கை.!
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நோர்வே அரசு தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரம் மற்றும் செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி உள்ளிட்ட விடயங்களில் வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் நோர்வே வலியுறுத்தியுள்ளது.
நோர்வே நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விசேட விவாதத்தின் போது, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஐடே இதனைத் தெரிவித்தார். நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்ஷாயினி குணரத்னம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்துகளை முன்வைத்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களின் பின்னர் இலங்கையில் புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளதை நோர்வே வரவேற்கின்றது எனவும், ஊழல் ஒழிப்பு, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துதல் போன்ற அரசின் வாக்குறுதிகள் முக்கியமானவை எனவும் குறிப்பிட்டார்.
எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடரும் பிரச்சினைகள் குறித்து இலங்கை அரசுடன் கலந்துரையாடி வருவதாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதில் நோர்வே உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக இலங்கை அரசு செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.