மட்டக்களப்பில் விசேட தேவையுடையோருக்கான சேவை மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்.!
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற மாவட்ட மட்ட கலந்துரையாடல் இன்று (27.02.2026) மட்டக்களப்பு நகர மண்டபத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் விசேட தேவையுடையோர் தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் விசேட தேவையுடைய நபர்களின் உரிமைகள், தேவைகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்களை ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகளை முன்வைப்பதற்காக இந்த மாவட்ட குழு அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கம் விசேட தேவையுடையோரின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், இதன் தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் மூன்றாவது மாவட்டமாக மட்டக்களப்பில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டது. மாவட்டத்தில் சுமார் 9,000க்கும் மேற்பட்ட விசேட தேவையுடையோர் இருப்பதுடன், 14 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இக்கூட்டத்தில் விசேட தேவையுடையோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நேரடியாக கேட்டு அறியப்பட்டதுடன், கல்வி, போக்குவரத்து வசதிகள், பரீட்சை முறைகள், விசேட வினாத்தாள் தயாரித்தல், பல்கலைக்கழகங்களில் சிறப்பு கல்வி வாய்ப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
விசேட தேவையுடையோர் மனித நேய அடிப்படையில் சமூகத்தில் முழுமையாக இணைந்து வாழும் சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர், சமூக சேவை உத்தியோகத்தர்கள், அரச உயர் அதிகாரிகள், துறைத் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
