சுரேஷ் சலே கைது – அடுத்த இலக்கு கோட்டாவே ! விமல் பகிரங்க எச்சரிக்கை.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கான முன்னோடி நடவடிக்கை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், தற்போதைய அரசாங்கம் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த இலக்கு கோட்டாபய ராஜபக்ஷவே எனத் தமக்கு தெரிகிறது என்றும் அவர் கூறினார். ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை அரசியல் நோக்கில் பயன்படுத்தி, சிலரை இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
புலனாய்வு அதிகாரிகள் நாட்டின் பாதுகாப்புக்காக சந்தேகநபர்களுடன் தொடர்பு வைத்திருப்பது இயல்பான நடைமுறையே எனவும், சஹ்ரான் ஹாஷிம் தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடனே அவரை கண்காணித்தது புலனாய்வுப் பிரிவினரே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன எனக் கூறிய விமல் வீரவன்ச, இத்தகைய செயல்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்றும் வலியுறுத்தினார்.