வரலாற்றுச் சாதனை படைத்தார் கனேடிய வீரர் யுவ்ராஜ்.!
சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில், கனடாவின் 19 வயதுடைய யுவ்ராஜ் சம்ரா அபார சதம் குவித்து சாதனை படைத்தார்.ரி20 உலகக் கிண்ண வரலாற்றில், ஐசிசி பூரண அந்தஸ்துபெற்ற நாடொன்றுக்கு எதிராக சதம் குவித்த முதல் இணை அங்கத்துவ நாட்டைச் சேர்ந்த வீரராக யுவ்ராஜ் இன்று நிலைநாட்டினார்.
இதனுடன், கிறிஸ் கேல், சுரேஷ் ரெய்னா, மஹேல ஜயவர்தன, ப்ரெண்டன் மெக்கலம், அலெக்ஸ் ஹேல்ஸ், அஹ்மத் ஷெஹ்ஸாத், தமிம் இக்பால், ஜொஸ் பட்லர், ரைலி ரூசொவ், க்லென் பிலிப்ஸ், பெத்தும் நிஸ்ஸன்க் ஆகியோருக்கு பிறகு, யுவ்ராஜ் 12ஆவது வீரராக ரி20 உலகக் கிண்ணத்தில் சதம் குவித்தார்.இன்றைய போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.
யுவ்ராஜ் சம்ரா 65 பந்துகளில் 11 பவுண்டறிகள் மற்றும் 6 சிக்ஸ்களுடன் 110 ஓட்டங்களை குவித்தார். அணித் தலைவர் டில்ப்ரீத் பஜ்வா 36 ஓட்டங்களைச் சேர்த்தார்.நியூஸிலாந்து பதிலுக்கு 15.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்தபடியே 176 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. க்லென் பிலிப்ஸ் (76 ஓட்டங்கள்) மற்றும் ரச்சின் ரவிந்த்ரா (59 ஓட்டங்கள்) மூன்றாவது விக்கெட் கூட்டணியில் 146 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியை உறுதி செய்தனர்.இத்தொடர்பில், யுவ்ராஜ் சம்ராவின் அபார சதம், ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் சிறப்பான சாதனையாக பதிவு செய்யப்பட்டது.