திருமலை புத்தர் சிலை விவகாரம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு.!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (9) உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழு இன்று நீதிமன்றில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.