சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை; 22 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கோரிய ஆக்ஸ்போர்டு பல்கலை!
சத்ரபதி சிவாஜி மகாராஜ் தொடர்பாக ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகம் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்க வரலாற்றாசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட “Shivaji: Hindu King in Islamic India” என்ற ஆங்கில மொழிப் புத்தகம், கடந்த 2003ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது.
இப்புத்தகத்தில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி மகாராஜ் குறித்து ஆதாரமற்ற மற்றும் சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக பல்வேறு தரப்புகளினாலும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.
\இந்த குற்றச்சாட்டுகளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகமும் ஏற்றுக்கொண்ட நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு, சத்ரபதி சிவாஜி மகாராஜின் 13ஆம் தலைமுறை வாரிசும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான உதயன்ராஜே போஸ்லேவிடம், அந்த பதிப்பகம் உத்தியோகபூர்வ மன்னிப்புக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த மன்னிப்புக் கடிதத்தில், “புத்தகத்தின் 31, 33, 34 மற்றும் 93ஆம் பக்கங்களில் இடம்பெற்றுள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் தொடர்பான சில தகவல்கள் ஆதாரமற்றவை என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம்.
இதற்காக எங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறோம். உதயன்ராஜே போஸ்லே அவர்களிடமும், பொதுமக்களிடமும் மன்னிப்பு கோருகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மன்னிப்பு அறிவிப்பு, மராத்திய மக்களிடையிலும், சிவாஜி மகாராஜ் ஆதரவாளர்களிடையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.