இலங்கை கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த சனத் ?
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூர்ய அடுத்த மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.சி.சி டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருடன் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.இலங்கை கிரிக்கெட் சபை அவரது பதவியை நீடிப்பதற்கு ஆர்வம் காட்டி வரும் நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஜூலையில் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் தற்காலிக பயிற்சியாளராகவே ஜயசூர்ய அழைக்கப்பட்டிருந்தார்.அந்தத் தொடரில் பல தசாப்தங்களின் பின் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி வென்றதை அடுத்தே ஜயசூர்ய இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.ஜயசூர்யவை தொடர்ந்தும் பயிற்சியாளராக தக்கவைப்பதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை மகளிர் அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டிருப்பதாக சில்வா உறுதி செய்துள்ளார்.இலங்கை மகளிர் அணிக்கு தற்போது இலங்கை முன்னாள் வீரர் ருமேஷ் ரத்னாயக்க பயிற்சி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.