சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நடைபெற்ற 3வது சுற்றுப் போட்டியில், ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் சாரா பெஜ்லெக்கை (Sara Bejlek) எதிர்த்துப் போட்டியிட்டுள்ளார்.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், நவோமி ஒசாகா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 7-6 (7-4), 6-4 என்ற கணக்கில் சாரா பெஜ்லெக்கை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
இதே தொடரில் நடைபெற்ற மற்றொரு 3ஆவது சுற்றுப் போட்டியில், ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா 6-4, 6-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் பொலினா குடர்மெடோவாவை இலகுவாக வீழ்த்தி 4வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற வீராங்கனைகள் பங்கேற்கும் 4வது சுற்றுப் போட்டிகள் நாளை மறுதினம் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.