இருவேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி இருவர் உ**யிரிழப்பு.!
நாட்டின் இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தவகையில், தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹலியத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகத் தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
மெதமஹநுவர பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தமது பயிர்களைப் பாதுகாப்பதற்காகத் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி, மின்சாரம் தாக்கி இவர் உயிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுக்கொல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபராவார்.
விவசாயக் காணியொன்றில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி இவர் உயிரிழந்துள்ளமை இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


