வாகனத்தை கடத்திச் சென்றவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்.!
சிற்றூர்தி ஒன்றைக் கடத்திச் சென்ற குழுவினர் மீது எஹெலியகொடை, பரகடுவ – அங்குருவங்குவ பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமது சிற்றூர்தி கடத்தப்படுகின்றது என்று அதன் உரிமையாளர் இன்று சனிக்கிழமை முற்பகல் அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார். இதற்கமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், அண்மையிலுள்ள வீதிச் சோதனைச் சாவடிகளில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்போது, அந்த சிற்றூர்தியை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்த போதிலும், சந்தேகநபர்கள் அதனை நிறுத்தாது அதிவேகமாகச் செலுத்தித் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதனையடுத்து சிற்றூர்தியைப் பின்தொடர்ந்த பொலிஸார், எஹெலியகொடை, பரகடுவ – அங்குருவங்குவ பிரதேசத்தில் வைத்து அதனை மறித்து நிறுத்தினர்.
எனினும், சந்தேகநபர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியமையுடன், மற்றைய சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தித் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபரைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


