வடமாகாண ஆளுநரிடம் முன்பள்ளி ஆசிரியர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.!
மன்னார் நகர சபை பிரிவிலுள்ள முன்பள்ளிகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களின் நலனை கருத்திற்கொண்டு மன்னார் நகர சபையினால் ஒரு வருடத்திற்கு என மாதாந்த கொடுப்பனவாக ஒதுக்கியுள்ள நிதியை விடுவிக்க வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் நகர சபை பிரிவிலுள்ள 23 முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள் சுமார் 60 பேர் வரை இணைந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) மன்னாரில் விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தனர்.
இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் நகர சபையினால் பாதீட்டில் ஒதுக்கப்பட்ட தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியை மன்னார் எல்லைக்கு உட்பட்டு இயங்குகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டு காலத்திற்கான கொடுப்பனவாக வழங்க மன்னார் நகர சபை தீர்மானித்திருக்கிறது.
இந்த தீர்மானம் தொடர்பாக எங்களுக்கு கடந்த மாசி மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எங்களுடைய வடமாகாண ஆளுநர் அவர்களால் தீர்மானம் புறக்கணிக்கப்பட்டு, தற்பொழுது இரண்டாவது பாதீட்டில் எங்களுக்காக கதைக்கப்பட்டு, எங்களது ஆசிரியர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க வேண்டும் என தவிசாளர் அவர்களினால் கூறப்பட்டுள்ளது.
இந்த கிடைக்கப் பெற வேண்டிய நிதி உதவியானது பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் எங்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும்.
இந்த நிதி உதவி எங்களுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே இந்த நிதி உதவியானது எமது ஆளுநர் அவர்களின் ஒப்புதலின் கீழ் வர வேண்டி இருக்கின்ற காரணத்தினால், இந்த நிதி உதவியை எங்களது ஆளுநர் எங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இந்த முன்பள்ளி ஆசிரியர் சமூகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
25, 30 ஆண்டுகளையும் கடந்த ஆசிரியர்கள் இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.
மாகாண திணைக்களத்தினூடாக பெறுகின்ற 6 ஆயிரம் ரூபாய் மட்டும் அதுவும் பதிவில் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் கிடைக்கப்பெறுகிறது. ஏனையவர்களுக்கு பெற்றோரிடம் வாங்குகின்ற ஒரு சிறிய தொகையே கிடைக்கின்றது. வேறு எந்த கொடுப்பனவுகளும் எமக்கு கிடைக்கவில்லை.
ஆகவே, எங்களுக்கு இந்த மன்னார் நகர சபையினால் ஒதுக்கப்பட்ட ஒரு வருடத்திற்கான தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியினை ஆளுநர் எங்களுக்கு விடுவிக்க வேண்டும். இதனால் ஆசிரியர்களது காலம் பொற்காலமாக சிறப்பததோடு எதிர்வரும் காலங்களில் முன்பள்ளி சமூகத்தை நல்லதொரு சமூகமாக கட்டியெழுப்பவும் முடியும்.
எங்களுடைய பொருளாதாரம் எங்களை மேம்படுத்த வேண்டும். பொருளாதாரத்தால் நாங்கள் வீழ்ச்சி அடைந்து போகும் பொழுது தான் எங்களுக்கு நிறைய மன சேர்வுகள் ஏற்படுகிறது.
ஆகவே, இந்த மன்னார் நகர சபையின் நிதி ஒதுக்கீட்டை ஆளுநர் அங்கீகரித்து எங்களுக்கு மிக விரைவாக பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.





