பாடசாலைகளை மூடுவது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.!
மத்திய கல்வி அமைச்சால் நாளை (27.10.2026) செவ்வாய்க்கிழமை நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், எதிர்காலத்தில் இடர்கால நிலைமைகள் ஏற்படும்போது, பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மானங்களை அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (26.10.2026) திங்கட்கிழமை மாலை வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஆளுநர் இவ்விடயங்களைத் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு, மத்திய கல்வி அமைச்சின் செயலாளரால் நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாளை ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் இடர்கால நிலைமைகள் ஏற்படும்போது, தமது கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளின் நிலைமைகளை ஆராய்ந்து, எந்தப் பாடசாலைகளை மூடுவது என்பது தொடர்பில் அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தினார். அவ்வாறு மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தொடர்பில் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்தார்.
மேலும், பேரிடர் காலங்களில் பொதுமக்களைத் தங்கவைக்கும் நிலையங்களாகப் பாடசாலைகள் பயன்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்படலாம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், அதற்கேற்ற வகையில் பாடசாலைகளைத் தயார்நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தினார். அத்துடன், இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் தொடர்ச்சியான தொடர்பைப் பேணுமாறும் வலியுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


