உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைச் செய்தி!

இந்திய செய்திகள் 1 மணி நேரம் முன்
68 பார்வைகள்

வங்கக் கடலில் ‘அர்னாப்’ (Arnab) புயல் உருவாகியுள்ளது.

இந்தப் புயல் இன்று (26) நள்ளிரவுக்குள் தீவிர புயலாகவும், நாளைய (27) தினத்துக்குள் மிகத் தீவிர புயலாகவும் வலுவடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் (IMD) எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து, ‘அர்னாப்’ (Arnab) புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று காலை 5:30 மணிக்கு, இந்த வளிமண்டல அமைப்பு வங்காள விரிகுடாவின் கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய பகுதிகளில் நிலைகொண்டிருந்தது. 

இது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஸ்ரீ விஜய புரத்திற்கு வடமேற்கே சுமார் 590 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு கிழக்கு-தென்கிழக்கே 650 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிற்கு கிழக்கு-தென்கிழக்கே 730 கி.மீ தொலைவிலும், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசூலிப்பட்டினத்திற்கு கிழக்கே 830 கி.மீ தொலைவிலும், பாபட்லாவிற்கு கிழக்கே 910 கி.மீ தொலைவிலும் அமைந்திருந்தது.

இந்தப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவுக்குள் வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியில் தீவிர சூறாவளியாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. 

மேலும், நாளை (27) அதே பகுதியில் இது மிகத் தீவிர சூறாவளியாக வலுப்பெறக்கூடும்.

இதன்பிறகு, இந்த அமைப்பானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, ஒக்டோபர் 28-ஆம் திகதி முற்பகல் நேரத்தில், மிகவும் தீவிரமான சூறாவளி புயலாக ஆந்திரப் பிரதேச கடற்கரையில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அப்போது காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வரை இருக்கும் என்றும், அவ்வப்போது 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தமிழகக் கடற்கரைப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிக்கிறது. இதனுடன் தொடர்புடைய வளிமண்டலச் சுழற்சி, கடல் மட்டத்திலிருந்து 7.6 கி.மீ உயரம் வரை பரவியுள்ளது. 

மேலும், லட்சத்தீவிலிருந்து இந்தச் சுழற்சி வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நீடித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வளிமண்டல அமைப்பின் தாக்கத்தால், ஒக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 

மேலும், மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

ஒக்டோபர் 27 அன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

அமித் ஷா தொடர்பான அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுதலை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 2018-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (26) விடுதலை…

74 0 0
இந்திய செய்திகள்

துப்பில்லாத ஹீரோவாக மாறிய துப்பாக்கி ஹீரோ: மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் தொடர் குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தொடரும் தாக்குதல்கள், உயிரிழப்பு சம்பவங்கள்…

93 0 0
இந்திய செய்திகள்

பிரபல சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்!

இந்தியாவின் பிரபல சமையல் கலை நிபுணரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவருமான செஃப் தாமு (Chef Damu), தனது 72ஆவது வயதில் இன்று (ஒக்டோபர் 25)…

103 0 0
இந்திய செய்திகள்

செஞ்சியில் காணாமல்போன சிறுமி : பொலிஸார் தீவிர விசாரணை

செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் பெற்றோரிடம் சிபிசிஐடி 2 ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த…

117 0 0