விசாரணைகள் முடிந்தும் நாமலுக்கு பிணை மறுப்பு; நீதிமன்றத்திலும் நீதி கிடைக்காத நிலை.!
வழக்குகளில் விசாரணை நடவடிக்கைகள் முடிவடைந்தால் பிணை வழங்குவதே இயல்பான நடைமுறை என்ற போதிலும், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையிலும் அவருக்கு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்படுவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களை பதிவு செய்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த அரசின் நடவடிக்கைகள் தோல்வியடையும் போதெல்லாம் தேரர்களுக்கும் ராஜபக்ஷவினருக்கும் எதிராக அடக்குமுறையைக் கையில் எடுத்து வருகின்றது.
நாமல் ராஜபக்ஷ எவ்வித சாட்சியங்களுமின்றிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் பிணை வழங்கப்பட வேண்டும். நாமல் ராஜபக்ஷவுக்குப் பிணை மறுக்கப்பட்டு நீதிமன்றத்துக்குள்ளும் நீதி கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.
இருப்பினும், நாம் இன்னமும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நீதிமன்றச் செயற்பாடுகளை மக்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள அரசின் ஆட்சியில், நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றது. பொருளாதார வளர்ச்சி வேகம் 5.3 சதவீதத்திலிருந்து 4.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருட்களின் விலையேற்றம், வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மற்றும் சத்திரசிகிச்சைகளுக்குப் பணம் செலுத்த வேண்டிய அவலநிலை என்பன ஏற்பட்டுள்ளன.
தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு காரணமாக 18 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளமை, ஜனாதிபதியின் செயலாளர் கொள்கலன்களை விடுவித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளமை, பொலிஸ்மா அதிபர் மற்றும் சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகள் எனப் பல ஒழுங்கீனங்கள் நிலவுகின்ற போதிலும், அரசு ஊழலை ஒழிப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றது.” – என்றார்.

