நெல் கொள்வனவு செய்வதற்காக விண்ணப்பித்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு காசோலை வழங்கல்
நெல் சந்தைப்படுத்தல் சபை தவிர்ந்து சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு நெல் கொள்வனவு செய்வதற்காக முதல் கட்டமாக மாவட்ட செயலகத்திற்கு 25மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக விண்ணப்பித்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான காசோலை வழங்கலும் அவர்களுடனான கலந்துரையாடலும் மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட விவசாயப்பணிப்பாளர், கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடல் தொடர்பாக மாவட்ட அரசாங்கதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
விவசாயிகளிடமிருந்து சிறுபோக நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக, மாவட்டங்கள் தோறும் தனியார் மற்றும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அரிசி ஆலை உரிமையாளர்களுக்குத் தலா 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 10 அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் கொள்முதல் செய்யச் சம்மதம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.
முதற்கட்டமாக 4 நபர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 6 பேருக்கு விரைவில் வழங்கப்படும்.
நாளையிலிருந்து நெல் கொள்முதலுக்கான ஏற்பாடுகள் தொடங்கப்படுகின்றன.
விவசாயிகளுக்கான நடைமுறைகள்:
நெல்லை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி ஆலையில் நெல் மாதிரியைச் (Sample) சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.
அனுமதி பெற்ற பின், கமநல சேவை மையத்தில் (ARPA / APC) தங்கள் பெயரினைப் பதிவு செய்து கொள்முதலுக்கான அனுமதியைப் பெறலாம்.
எனவே, விவசாயிகள் விரைவாகத் தங்கள் பகுதிக்குரிய அரிசி ஆலைகளை அடையாளம் கண்டு, மாதிரிகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
யாழ் மாவட்டத்திலிருந்து 13 அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் கொள்முதல் செய்யச் சம்மதம் தெரிவித்துள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், அவர்கள் எந்தெந்தப் பிரதேசங்களில் கொள்முதல் செய்ய முடியும் என்பது குறித்த ஒதுக்கீடுகள் விரைவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.



