சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!
“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கம்பஹா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டுவதாகக் கூறிக்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அனுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்தினார்கள். அந்த மேடையில் சகல ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் ராஜபக்ஷர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும். இவர்கள் எப்போதுமே சந்தர்ப்பவாத அரசியலில்தான் ஈடுபடுவார்கள்.
கடந்த காலங்களில் இவர்கள் தமது சுயநல தேவைகளுக்காகவே அரசியல் செய்தனர். தற்போது தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்.” – என்றார்.