ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா.!
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3 ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில், 2025ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் ஏற்பாட்டில், தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வு இன்று 12ஆம் திகதி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு. ரூப்பஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
தங்களுக்கு கல்வி அறிவையும் வாழ்க்கைப் பாதைக்கான வழிகாட்டலையும் வழங்கிய ஆசிரியர்களுக்கு நன்றியையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வின் சிறப்பம்சமாக மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்று, விழாவை மேலும் சிறப்பித்தன. இதன்போது பாடசாலை அதிபர் திரு. ரூப்பஸ் அவர்களும் மாணவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
மேலும், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர்கள் தங்களது ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் சேவையையும் நினைவுகூர்ந்து நன்றியை வெளிப்படுத்திய இந்நிகழ்வு, ஆசிரியர் – மாணவர் உறவின் உன்னதத்தையும் கல்வியின் மீதான மாணவர்களின் மதிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.