மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் ஊடக சந்திப்பு.!
கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களை தெளிவூட்டும் ஊடக சந்திப்பை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் ஏற்பாடு செய்திருந்தார்.
தற்போது ஒரு சீரான ஒழுங்குமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை வட்டக்கச்சி, திருவையாறு பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட மணல், வரும் திங்கட்கிழமை முதல் இரணைமடுக் குளத்தின் உட்பகுதியிலிருந்து விநியோகிக்கப்படவுள்ளது. இதற்காக முதற்கட்டமாக சுமார் 3,000 கியூப் மணல் தயார் நிலையில் உள்ளது.
பொதுமக்கள் தங்களது சொந்த வீடமைப்பு, மலசலக்கூடங்கள் மற்றும் கிணறுகள் போன்ற தேவைகளுக்கும், அரச கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் தங்களது திணைக்களங்கள் மூலமாகவும் மணலைப் பெற்றுக்கொள்ள முடியும். (வீட்டுத் திட்டங்களுக்கு மட்டுமே மணல் வழங்கப்படும் என்ற செய்தி தவறானது).
தேவையான ஆவணங்கள்:
மணல் முறைகேடாக வெளியில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, மணல் குறிப்பிட்ட இடத்திற்குத்தான் கொண்டு செல்லப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரின் ஒப்புதல் கடிதம் அவசியமாகும்.
விலை விவரம்:
குறைந்தபட்சம் 40,000 முதல் அதிகபட்சம் 45,000 வரையிலான விலையில் மணலைப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
களஞ்சியத்திலிருந்து மணலை ஏற்றிவிடும் பொறுப்பு பிரதேச சபையைச் சார்ந்தது. அங்கிருந்து எடுத்துச் செல்லும் பொறுப்பு விண்ணப்பதாரரைச் சார்ந்தது. பாரவூர்தி சங்கத்தினர் ஒவ்வொரு பொலிஸ் பிரிவுக்கும் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் தனியாரும் வாகனங்களை ஒழுங்கு செய்ய முடியும்.
ஜனவரி மாதம் முதல் ‘மணல் யாட்’ (Sand Yard) அமைத்து, உழவியந்திரம் மற்றும் ஏனைய வாகனங்கள் மூலமாகவும் பொதுமக்கள் எளிதாக மணல் பெற புதிய நடைமுறை உருவாக்கப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகங்கள் இருப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து உள்ளூராட்சி வாரம் தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார்.
கரைச்சி பிரதேச சபையினால் எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 19ஆம் திகதி சனிக்கிழமை வரை தேசிய உள்ளூராட்சி வார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நாட்களில் தினந்தோறும் பல்வேறு பணிகள் வகைப்படுத்தப்பட்டு சிறப்பான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அந்தவகையில்,
திங்கட்கிழமை (14ஆம் திகதி): அரசின் பிரகடனப்படி வருமான சேகரிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிபுரம், மலையாளபுரம், கிருஷ்ணபுரம், பொன்னகர், விவேகானந்தநகர் ஆகிய பகுதிகளை மையப்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் கழிவகற்றல் செயல்முறை, வருமான சேகரிப்பு, கட்டட நிர்மாணங்களுக்கான அனுமதி வழங்கல் மற்றும் உணவகங்களைப் பரிசோதித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
செவ்வாய்க்கிழமை (15ஆம் திகதி): மரநடுகை தினமாகவும் ஓசோன் தினமாகவும் அனுசரிக்கப்படும்.
எல்நினோ காலநிலை விழிப்புணர்வுச் செயல்பாடுகள், கரடிப்போக்கு சந்தியிலிருந்து பரந்தன் வழியாக மரநடுகை வேலைத்திட்டங்கள் இடம்பெறும்.
பள்ளிகளில் பிரதேச சபையின் கழிவு முகாமைத்துவம் குறித்து பாடசாலை மாணவர்களிடையே விழிப்புணர்வு அமர்வுகள் நடத்தப்படும்.
புதன்கிழமை (16ஆம் திகதி)
காலையில் புத்தகக் கண்காட்சி ஆரம்பிக்கப்படும்.
ஆனைவிழுந்தான் மற்றும் வன்னேரி பிரதேசங்களில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்படும்.
நகரிலுள்ள அரசு, அரசு சாரா மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கழிவுகள் அனைத்தும் கட்டணங்களின்றி இலவசமாகச் சேகரிக்கப்பட்டு அகற்றும் சிறப்புத் திறந்த கழிவகற்றல் நாளாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (17ஆம் திகதி) முதல் சனிக்கிழமை (19ஆம் திகதி) வரை:
கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் மூன்று நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறும்.
பிரதேச சபைக்குட்பட்ட 4 நூலகங்களில் உள்ள 40,000க்கும் மேற்பட்ட நூல்களில் 10,000க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க நூல்கள் காட்சிப்படுத்தப்படும்.
மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சிறப்பு அரங்குகள் நடைபெறும்.
முதலாம் நாள்: மூத்த கலைஞர் நாவன்னா யோகேந்திரநாதன் அரங்கம்.
இரண்டாம் நாள்: படைப்பாளி பெருமாள் கணேசன் அரங்கம்.
மூன்றாம் நாள்: சிறப்பு நிறைவு அரங்கம்.
உள்ளூர் படைப்பாளிகளின் புத்தகங்கள் நயப்புரைகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெறும்.
வெள்ளிக்கிழமை (18ஆம் திகதி):
21 வட்டாரங்களுக்கிடையிலான ஆண்/பெண் குழுக்களுக்கான கயிறிழுத்தல் போட்டி உருத்திரபுரம் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும்.
உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்களுக்கான தாயத்துப் போட்டியும் இடம்பெறும்.
சனிக்கிழமை (19ஆம் திகதி):
சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் பரிசளிப்பு விழா மற்றும் உறுதி நிகழ்வு நடைபெறும்.
வாழ்வாதார உதவிகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வுகளுடன் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் நிறைவடையும்.
பெற்றோருக்கான கோரிக்கை:
பிள்ளைகளிடம் புத்தக வாசிப்புப் பண்பாட்டை உருவாக்கவும், சமூக நற்பண்புகளை வளர்க்கவும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துப் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை இப்புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.