உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

ஊக்குவிப்புத் தொகையால் மாத்திரம் குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிக்க முடியாது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
70 பார்வைகள்

குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதால் மாத்திரம் இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிக்க முடியாதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு குடும்பங்களைக் கோருவதற்கு முன்னர், அந்தக் குழந்தைகளை பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் வளர்க்கக்கூடிய சமூகச் சூழலை அரசு உருவாக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்கவேண்டும் என நாடாளுமன்றில் 11.09.2026 இன்று முன்மொழியப்பட்ட பிரேரணை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்கவேண்டும் என்ற இந்தப் பிரேரணையின் அடிப்படை நோக்கத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனாலும் ஊக்குவிப்புத் தொகையால் மாத்திரம் குழந்தை பிறப்பை நிலையான முறையில் அதிகரிக்க முடியாது. குழந்தையைப் பெற்றெடுத்து, பாதுகாப்பாகப் பராமரித்து, தொழிலையும் குடும்ப வாழ்க்கையையும் ஒன்றாக முன்னெடுக்கக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாக இருக்கவேண்டும்.

இது குடும்பங்களுக்கான பணம் வழங்குவதால் மாத்திரம் தீர்க்கக்கூடிய பிரச்சினை அல்ல. வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, குழந்தை பராமரிப்பு, போக்குவரத்து மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய அனைத்துடனும் தொடர்புடைய ஒரு தேசிய மட்டப் பிரச்சினை.

வன்னித் தேர்தல் மாவட்டத்தின் நிலைமையை கருதும் போது, வெளிமாவட்டங்களில் இருந்து வந்து பணிபுரியும் ஊழியர்கள், வெளிமாவட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள், கணவன் ஒரு மாவட்டத்திலும் மனைவி மற்றொரு மாவட்டத்திலுமாக பணிபுரியும் ஊழியர்கள், ஐந்தாண்டுக்கும் மேலாக பணிபுரிந்தும் பதிலீடு இன்றிய இடமாற்றத்தால் தொடர்ந்தும் வெளிமாவட்டத்தில் தங்க வைக்கப்படும் ஊழியர்களும் உள்ளனர்.

சூரியன் உதிக்க முதல் வீட்டிலிருந்து வெளியேறி சூரியன் மறைந்த பின்னர் வீடு திரும்பும் நிலை இங்கு பல பெண்களுக்கு உண்டு. கர்ப்ப காலத்திலும் இத்தகைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பது அவர்களின் உடல் நலம், பாதுகாப்பு மற்றும் குடும்ப நலனுக்கு அச்சுறுத்தலாகிறது.

பணியிடங்களில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையும் அதிக பணிச்சுமையும் மகப்பேறு தொடர்பான தீர்மானங்களை தொடர்ச்சியாக தள்ளிப்போடுவதற்கான அழுத்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகின்றன.

அரச பெண் ஊழியர்களுக்கு ஒவ்வொரு உயிர்ப்பிறப்புக்கும் விடுமுறை பெறக்கூடிய ஏற்பாடு உள்ளது. ஆனால் தனியார் துறையில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இதே அளவிலான பாதுகாப்பு கிடைப்பதில்லை. தனியார் துறை முழுவதற்கும் பொதுவான சட்ட உரிமையாக இல்லை.

ஒரே நாட்டின் தாய்மாருக்கு அவர்கள் பணிபுரியும் துறையைப் பொறுத்து வெவ்வேறு அளவிலான பாதுகாப்பு வழங்கப்படுவது நியாயமானதா?
குழந்தை பிறந்த பின்னரும் குழந்தை முன்பள்ளிக்குச் செல்லும் வரை, பெற்றோர் தமது வேலை நேரத்தில் குழந்தையை பராமரிப்பதற்காக வேறு ஒருவரை அமர்த்த வேண்டியுள்ளது. தரமானதும் கட்டுப்படியாகக் கூடியதுமான பகல் நேரக் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் மிகவும் குறைவாக உள்ளன. வன்னியில் இந்த வசதி மேலும் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் தமது தொழிலைத் தொடர்வதா குழந்தையைப் பராமரிப்பதா என்ற இரண்டில் ஒன்றைத் தெரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
பாதுகாப்பான பணிச்சூழல், குடும்பங்களை ஒன்றிணைக்கும் இடமாற்றக்கொள்கை, அரச தனியார் துறைகளில் சமமான மகப்பேற்று விடுமுறை ஒழுங்கு, தந்தையர்குரிய சலுகைகள், நெகிழ்வான வேலை ஏற்பாடு மற்றும் தரமான குழந்தைப் பராமரிப்பு வசதி என்பனவும் வழங்கப்பட வேண்டும்.

குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு குடும்பங்களைக் கோருவதற்கு முன்னர், அந்தக்குழந்தைகளை பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் வளர்க்கக்கூடிய சமூகச்சூழலை அரசு உருவாக்க வேண்டும். குடும்பங்களின் நம்பிக்கை அதிகரிக்கும் போது பிறப்புகளின் எண்ணிக்கையும் இயல்பாக அதிகரிக்கும்.

எனவே ஒரு தடவை வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையைத் தாண்டி, அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெற்றோர்களைப் பாதுகாக்கும் ஒருங்கிணைந்த தேசிய குடும்பநலக் கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்! மணல் அகழ்வு அனுமதிகள், வனப்பகுதிகள் மற்றும் வீதி அபிவிருத்தி தொடர்பில் முக்கிய முடிவுகள் மன்னார்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராக க.ஏகாந்தன் அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர்…

69 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு எதிராக நாளை மாபெரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.!

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என்று குற்றம்…

89 0 0
இலங்கை செய்திகள்

கைக்குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மீட்பு.!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்று, பாதுக்க இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட…

131 0 0