மிக் போர் விமானக் கொள்முதல் விவகாரம்; ரொஷான் குணதிலக்கவிடம் வாக்குமூலம் பதிவு.!
மேல் மாகாண முன்னாள் ஆளுநரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதியுமான ஏயர் வைஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இன்று காலை நிதியியல் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜரானார்.
கொழும்பு பழைய பொலிஸ் தலைமையகத்தில் அமைந்துள்ள நிதியியல் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று காலை வருகை தந்த அவரிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய மிக் (MiG) போர் விமானக் கொள்முதல் விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் பெறப்பட்டது.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது, அதாவது 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உக்ரைன் நாட்டில் இருந்து இலங்கை விமானப்படைக்காக மிக்-27 (MiG-27) ரக போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடு செய்யப்பட்டதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
குறித்த ஒப்பந்தங்களின் போது விமானப்படைத் தளபதியாகச் செயற்பட்டவர் என்ற அடிப்படையில், இந்த நிதி முறைகேடுகள் மற்றும் கொள்முதல் நடைமுறைகள் குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
2006 முதல் 2011 வரை இலங்கை விமானப்படைத் தளபதியாகப் பணியாற்றி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றிய ரொஷான்ன் குணதிலக்க, பின்னர் முப்படைத் தலைமை அதிகாரியாகவும், மேல் மாகாண ஆளுநராகவும் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.