இலஞ்சம் வழங்கியவரைக் கைது செய்த பின்பே பெற்றவரைக் கைது செய்திருக்க வேண்டுமாம்.!
அநுர அரசு நாமல் ராஜபக்ஷவைக் கைது செய்ததன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் கூட்டத்துக்குப் பலத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளது என்று தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு முதலில் இலஞ்சம் வழங்கியவரைக் கைது செய்த பின்னரே இலஞ்சம் பெற்றவரைக் கைது செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்புப் பணியாள் தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“நாமல் ராஜபக்ஷ தவறு செய்திருந்தால் அவரைச் சிறைப்படுத்துவதில் தவறு இல்லை; ஆனால், கைது செய்திருக்கும் முறை முற்றாகப் பிழையானது. நிமல் பெரேரா என்ற நபர் மோசடிகளைச் செய்துவிட்டு நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரமே நாமல் ராஜபக்ஷவை ஆணைக்குழு கைது செய்துள்ளது. இலஞ்சம் வழங்குவதும் பெறுவதும் தவறு என்பதால், விசாரணை ஆணைக்குழு முதலில் இலஞ்சம் வழங்கியவரைக் கைது செய்திருக்க வேண்டும்.
இந்த அரசின் நடவடிக்கை காரணமாக நாமல் ராஜபக்ஷவின் கைது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் கூட்டத்துக்குப் பெரும் பலத்தை வழங்கியுள்ளது. ஆனால், கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு விழாவின்போது அரசு எங்களுக்கு இத்தகைய பலத்தை வழங்கவில்லை. என்னைச் சிறையில் அடைத்திருந்தால் எமது கூட்டத்துக்கும் இன்னும் அதிகமான மக்கள் வந்திருப்பார்கள்.
வெளிநாட்டுடன் கடன் இல்லாமல் 3 நெடுஞ்சாலைகளை அமைப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததை நாங்கள் வரவேற்கின்றோம். எனினும், அவ்வாறு நெடுஞ்சாலைகள் அமைக்கும்போது அதற்குத் தேவையான மூலப்பொருட்களை டொலர் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைகள் அமைக்கும் தரகுப் பணம் பெலவத்தையில் உள்ள ‘ரில்வின் சில்வா பிரைவட் லிமிடெட்’ நிறுவனத்துக்கே செல்லும். இன்று அதிக பணம் அந்த நிறுவனத்தில் இருக்கின்றது.
அர்ஜுன் மகேந்திரனைச் சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்கு அழைத்து வருவதாகத் தெரிவித்த இந்த அரசு, அவரை ஒருபோதும் நாட்டுக்குக் கொண்டுவரப் போவதில்லை. மத்திய வங்கி மோசடி செய்த அர்ஜுன் மகேந்திரன் வெளிநாட்டுக்குத் தப்பியோட அரசிலுள்ள பிரதான நிறுவனம் ஒன்றின் பிரதானியே கடவுச்சீட்டை வழங்கி முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அதனால் இந்த அரசு வீழ்த்தப்பட்டால், அர்ஜுன் மகேந்திரனுக்குக் கடவுச்சீட்டுத் தயாரித்துக் கொடுத்த அந்த அதிகாரிக்கே முதலாவது வழக்கு தொடுக்கப்படும்.” – என்றார்.