22 ஆம் திருத்த விசாரணைகள் குறித்து கொமன்வெல்த் சட்டத்தரணிகள் விசனம்.!
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகளுக்காக பூரண அல்லது முழுமையான நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தை நியமிப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கு, பொதுநலவாய (கொமன்வெல்த்) நாடுகளின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தமது கவலையை வெளியிட்டுள்ளார்.
அதே சமயம் இந்தச் சட்டமூலம் தொடர்பான விசாரணைகளின் போது அரசுத் தரப்பின் வாதத்துக்கு மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிகள் எதிர்த்துப் பதில் வாதம் செய்வதற்கு இடமேயளிக்காமல் விசாரணையை முடித்துக் கொண்டமை குறித்தும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திரு, அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணையை அவதானிப்பதற்காக நேற்று முன்தினம் உயர்நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான கவலைகள் குறித்து சட்டத்துறையைச் சேர்ந்த பலருடனும் தாம் கலந்துரையாடினார் என்று அவர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், நீதித்துறையின் சுதந்திரத்துக்கு இது மிகவும் முக்கியமானது என்பதால், இந்த வழக்கை விசாரிக்க ஏன் ஒரு விரிவான அமர்வு அல்லது பூரண நீதியரசர்கள் அடங்கிய ஆயம் நியமிக்கப்படவில்லை என்பது சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கவலைகளில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.
முக்கியமான அரசமைப்பு மற்றும் நீதித்துறை சார்ந்த வழக்குகள் வழக்கமாகப் பெரிய அமர்வுகளாலேயே விசாரணை செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், பூரண ஆயத்துக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் கவலைக்குரிய விடயமாக இதைக் குறிப்பிட்ட ஸ்டீவன் திரு, விரிவான அல்லது முழுமையான அமர்வை அமைக்காமைக்கான காரணங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த விசாரணைகளின் போது அரசு தரப்பினால் நேற்று முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு மனுதாரர் தரப்பின் சட்டத்தரணிகள் பதில் வாதம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் மாலை 5:30 மணியோடு இந்த வழக்கு விசாரணைகளை முடிவுறுத்துவதாக அறிவித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்களின் எதிர்வாதம் ஏதேனும் இருக்குமாயின் அவற்றை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு முன்னர் உயர்நீதிமன்றத்தில் எழுத்து மூலமாகத் தாக்கல் செய்யும்படி கூறி விசாரணையை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
உயர்நீதிமன்ற ஆயத்தின் இந்த முடிவை பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் விசனத்துடன் விமர்சித்தார்.
வழமையாக இது போன்ற முக்கிய விடயங்களில் மனுதாரர் தரப்பின் பதில் வாதம் முக்கிய விவகாரமாகக் கருதப்படும். அதற்கு வாய்ப்பளிக்க மறுத்தமை கவலைக்குரியது என்றார் அவர்.
இதேவேளை, அரசால் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் நேற்றுமுன்தினம் நிறைவு செய்தது.
அந்தச் சட்டமூலத்தின் அரசமைப்பு அமைவுடைமை தொடர்பான வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக நேற்றுமுன்தினம் உயர்நீதிமன்றம் அறிவித்தது.
அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இரண்டு நாட்களாக இடம்பெற்றிருந்தது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சசூரசேன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய, 22ஆவது திருத்ததைச் சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 79 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அவற்றில் 41 மனுக்கள் இணைய வழி மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசமைப்பு திருத்தம் ஒன்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.