அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான அனுபம மங்கள விக்கிரமாரச்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமை தாங்கினார்.
இதன்போது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். அப்துல் வாசித், அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
மேலும், அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பல்வேறு அரச திணைக்களங்களின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.