மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!
இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும் தயாரிப்பாளருமான செல்வின்தாஸ் அவர்களினால் 50,000 ரூபாய் பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்பட்டது.
1965-ஆம் ஆண்டு ‘ஒருத்தி சொன்னால்’ மற்றும் ‘புரட்சி மணி’ ஆகிய நாடகங்களின் மூலம் தனது கலைப்பயணத்தைத் தொடங்கிய லீலா ரஞ்சனி, 1972-ஆம் ஆண்டு முதல் முழுவீச்சில் இயங்கி ‘கலியுக வரதன்’ போன்ற பல மேடை நாடகங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார். நாடகத் துறையிலிருந்து திரைத்துறைக்கு அடிஎடுத்து வைத்த இவர், 1969இல் வெளிவந்த ‘குத்துவிளக்கு’, 1974இல் வெளியான ‘மீனவப்பெண்’ மற்றும் 1976இல் வெளியான ‘பார்த்திருந்தால் வருவேன்’ உள்ளிட்ட புகழ்பெற்ற இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களில் முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரது கலைச்சேவையினைப் பாராட்டி பல விருதுகளும் அங்கீகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
1972ஆம் ஆண்டு ‘காலங்கள் அழுவதில்லை’ என்ற நாடகத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கவின் கலை மன்றத்தின் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு ஆல் சிலோன் எம்.ஜி.ஆர் மன்றத்தின் மூலம் ‘அண்ணா விருது’ மற்றும் ‘கலைச்செல்வி’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். மேலும், இலங்கைத் தமிழ் கலைஞர் சங்கத்தின் சார்பில் கலைஞர் ராஜசேகரன், அப்போதைய அமைச்சர் மனோ கணேசன் MP மற்றும் பொன் பத்மநாதன் ஆகியோரால் இவரது கலைச்சேவையை பாராட்டிப் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.
கலைத்துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து மறைந்த மூத்த கலைஞர் கே. வின்சென்ட் அவர்களின் மனைவியான லீலா ரஞ்சனி, கணவரின் மறைவுக்குப் பின் தன் 32 ஆண்டு காலத் தனிமை வாழ்க்கையில் பல்வேறு பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கி வருகிறார். தற்சமயம் தனது மகள் ஸ்டெல்லாவின் பராமரிப்பில் வாழ்ந்து வரும் இவர், கலைத்துறையினரும் அரசும் தனக்கொரு நிரந்தர வீடமைத்துத் தர உதவ வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளார்.
நிகழ்வில் தன் கலைத்துறை அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்த லீலா ரஞ்சனி, ஆரம்ப காலத்தில் போதிய ஊதியம் இன்றி கலை மீதான பற்றினால் மட்டுமே தொடர்ந்து நடித்ததாகவும், தந்தை இறந்த துக்கமான சூழலிலும் கூடக் கலைக்காகத் தன் கடமையை நிறைவேற்றச் சென்றதாகவும் உருக்கமாகக் கூறினார். அக்காலத்தில் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களில் கலைஞர்களை விசாரிப்பதற்கோ, பராமரிப்பதற்கோ முறையான ஆதரவு அமைப்புகள் இருக்கவில்லை என்றும், தற்காலத்தில் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் போது மூத்த கலைஞர்களின் வருகை குறைவாக இருப்பதாகவும் கவலை வெளியிட்டார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, கலைஞர்களைக் கௌரவிக்கும் நோக்கிலும் அவர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிப்பதாகக் கூறி, கலைஞர் செல்வின்தாஸ் மற்றும் அமைப்பாளர்களுக்குத் தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்வை ஒருங்கிணைத்துப் பேசிய ஷாந்தனா, திரையுலகில் பல சாதனைகளைச் செய்துவிட்டு தற்போது பலராலும் மறக்கப்பட்ட நிலையில் இருக்கும் மூத்த கலைஞர்களைக் கண்டறிந்து கௌரவிப்பது காலத்தின் அவசியம் என வலியுறுத்தினார்.
‘Artist for Artists’ அமைப்பில் மூத்த கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தபோது, அதனை உடனடியாகச் செயல்படுத்த தயாரிப்பாளரும் நடிகருமான செல்வின்தாஸ் முன்வந்ததாகக் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் முதல் நிகழ்வாக மூத்த நடிகை செல்வம் அம்மாவுக்கும், அதனைத் தொடர்ந்து ‘கூத்தாடி’ போன்ற படங்களின் வெளியீட்டு தருணங்களிலும் கௌரவிப்புகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 4-வது கட்ட நிகழ்வாக லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், செல்வின் தாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கிரே’ (Grey) திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், இனிவரும் காலங்களில் ‘கிரே’ படத்தின் ஒவ்வொரு போஸ்டர் வெளியீட்டின் போதும், சுமார் 25 முதல் 30 வரையிலான மூத்த கலைஞர்களை நேரில் அழைத்து பொற்கிழி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் மூத்த கலைஞர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை உணர்த்தவும், அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறவுமே இத்தகைய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுவதாக ஷாந்தனா குறிப்பிட்டார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவுஸ்திரேலியப் பிரபல தயாரிப்பாளர் MS. தனபாலசுந்தரம் பேசுகையில், ஒரு கலைஞன் உரிய முறையில் கௌரவிக்கப்படும் போதுதான் கலைத்துறை உண்மையான வளர்ச்சியை எட்டும் என்றார்.
“இலங்கையில் திரைப்படங்களை உருவாக்க முடியாது; மக்கள் பார்க்க மாட்டார்கள்” என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், நண்பர் செல்வின்தாஸின் இந்த முன்னோடி முயற்சி புலம்பெயர்ந்து வாழும் ஏனைய கலைஞர்களினாலும் தொடரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், ‘ஆர்ட்டிஸ்ட் குளோபல் குரூப்’ (Artist Global Group) அமைப்பை உருவாக்கிய சாந்தனா அவர்களின் முயற்சியைப் பாராட்டிய அவர், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள கலைஞர்களை ஒன்றிணைக்கும் இத்தகைய அமைப்புகள் இருப்பதால் மட்டுமே கலை உலகினருக்கு ஆதரவு அளிக்க முடிகிறது என்றார்.
இவ்விழாவில் நடிகரும் தயாரிப்பாளருமான செல்வின்தாஸ் அவர்களின் அழைப்பின் பேரில், தயாரிப்பாளர் MS. தனபாலசுந்தரம், அவரது பாரியார் கனகலிங்கேஸ்வரி தனபாலசுந்தரம், பாடகரும் இசையமைப்பாளரும் குரல் பயிற்றுவிப்பாளருமான கே. மஹிந்தகுமார், சிரேஷ்ட படத்தொகுப்பாளர் ‘எடிட்டர் நிரஞ்சன்’, நடிகர் விக்னேஷ் தேவராஜ், நடிகர் சந்திரன், நடிகையும் சமையற்கலை நிபுணருமான ஷாமலா நிரஞ்சன் மற்றும் தெகிவளை மில்லேனியம் விலா & ஹாலிடே ஹோம்ஸின் அதிபர் திரு உட்பட பல கலைஞர்களும் சிறப்பு அதிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வை சிரேஷ்ட நடிகையும் பிரபல சமூக சேவகியுமான ஷாந்தனா அவர்கள் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



