உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

சிறையைக் காக்க முடியாதவர்களா நாட்டை பாதுகாக்கப் போகிறார்கள்?

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
3 பார்வைகள்

“சிறைச்சாலைக்குள்ளே பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத இந்த அரசு, நாட்டின் 220 இலட்சம் மக்களின் தேசிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்தப் போகின்றது?” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கொடூர மோதல் சம்பவங்கள் குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்ததாவது,
“சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விளக்கமறியலில் இருந்தாலும் அல்லது தண்டனைக் கைதிகளாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் அரசின் பொறுப்பிலேயே உள்ளனர். கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பான முழுப் பொறுப்பும் அரசுக்கே உரியது எனத் தற்போதைய ஜனாதிபதியே அன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பிரஸ்தாபித்திருந்தார்.

தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 27 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஜனாதிபதியின் அன்றைய கூற்றுப்படி, இதற்கான முழுப் பொறுப்பையும் தற்போதைய அரசே ஏற்க வேண்டும். கைதிகள் அரசின் பொறுப்பில் உள்ளமையால் அவர்களின் உயிர் பாதுகாப்புக்கு அரசே பொறுப்பு என்ற ஜனாதிபதியின் கூற்றை நீதி அமைச்சர் ஏற்றுக்கொள்கின்றாரா? இல்லையா?

அரசமைப்பின் மூன்றாம் அத்தியாயத்தின் அடிப்படை உரிமைகளின் பிரகாரம், எந்தவொரு நபரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது அவமதிப்பான நடாத்துகைக்கோ, தண்டனைக்கோ ஆளாக்கக் கூடாது.

76 வருட சாபத்தை ஒழித்து, ‘வளமான நாடொன்றையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்குவோம்’ எனக் கூறி சிறைச்சாலைத் துறையில் புதிய முறைமையைக் கொண்டு வந்துள்ளதாக இந்த அரசு பிரச்சாரம் செய்தது. ஆனால், நீர்கொழும்பில் நடந்த கொடூர சம்பவத்தின் மூலம் தற்போதைய கொள்கைப் பிரகடனம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதுடன், முறைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது தெளிவாகின்றது.

சிறைச்சாலைத் துறையில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே இடமிருந்தாலும், தற்போது சுமார் 40 ஆயிரம் பேர் வரை அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. நாட்டின் சிறைச்சாலைகளின் நெரிசலைத் தீர்ப்பது குறித்து நீதி அமைச்சர் எப்போதாவது ஆராய்ந்தாரா? இந்த இடநெரிசல் குறித்து குறைந்தபட்சம் ஓர் அபாய மதிப்பீடாவது செய்யப்பட்டதா?

முந்தைய ஆட்சிக் காலங்களில் நடந்த மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை சம்பவங்களில் இருந்து கூட இந்த அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இதுவரை ஒரு நிரந்தர சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தைக் கூட நியமிக்க இவர்களால் முடியாமல் போயுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டின் நீதி அமைச்சரால் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கூட சரியாகக் கூற முடியாமல் போனது ஆச்சரியமளிக்கின்றது. இந்தச் சம்பவம் நடந்த பின்னர் ஆரம்ப அறிக்கை ஏதேனும் பெறப்பட்டதா என்பது கூட சந்தேகமாகவே உள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான முழுப் பொறுப்பையும் ஏற்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு இன்று அதையும் செய்ய முடியாமல் போயுள்ளது. நீதி அமைச்சர் இந்த நாட்களில் சிறைச்சாலை நெருக்கடிகளைப் பற்றி ஆராய்வதை விட, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்து, நீதிமன்றக் கட்டமைப்புக்கு அழுத்தம் பிரயோகிக்கவே முயற்சித்து வருகின்றார்.

உயர் நீதிமன்றங்களில் நீதியரசர்களுக்குப் பல வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவற்றை நிரப்ப முனையாமல், தங்களுக்குச் சாதகமான விடயங்களை ஆராய்வதால் நீதி அமைச்சருக்குத் தனது உண்மையான பொறுப்பு மறந்து போயுள்ளது. இனிமேலாவது அரசு தங்களது ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தை முழுமையாக வாசித்து, அதனைச் சரியாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

17 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

24 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

19 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

20 1 0