மலையக அரசியல் அரங்கம் – மலையக ஊழியர் சங்கம் கூட்டிணைவு அறிவிப்பு.!
மலையக அரசியல் அரங்கம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதனுடன் அரசியல் ரீதியாக கூட்டிணைந்து செயற்பட மலையக ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளதாக இரு தரப்பும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 22 ஆம் திகதி ஹட்டனில் நடைபெற்ற மலையக அரசியல் அரங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, அமைப்பின் செயலாளர் நாயகம் மயில்வாகனம் திலகராஜா மற்றும் மலையக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்மணி சிவனேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்த புரிந்துணர்வின் அடிப்படையில், மலையக அரசியல் அரங்கத்தின் தலைவி அருளப்பன் இதயஜோதி முன்னிலையில், மலையக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்கண்மணி சிவனேசனுக்கு ஊவா மாகாண அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சங்கத்தின் தலைவர் என். விஸ்வநாதன், அமைப்பாளர்கள் எஸ். ராஜாராம், எஸ். தியாகராஜா மற்றும் செயற்பாட்டாளர் அ. சுந்தரேசன் ஆகியோருக்கு அரங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியாக இணைந்து செயற்பட இரு அமைப்புகளும் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், இந்த கூட்டிணைவு மலையகம் முழுவதும் விரிவடையும் அரசியல் கூட்டணிக்கான அடித்தளமாக அமையும் எனவும் மயில்வாகனம் திலகராஜா குறிப்பிட்டுள்ளார்.