இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றிய ஜனிக் சின்னர்.!
அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் வெற்றி பெற்று முதல் முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் முன்னணி வீரர்களான ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் மற்றும் ஜனிக் சின்னர் ஆகியோர் மோதினர்.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய போட்டியில் இருவரும் தொடக்கத்திலிருந்தே கடுமையான போட்டியை வெளிப்படுத்தி மாறி மாறி புள்ளிகளைப் பெற்றனர்.
முதல் செட் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், டைபிரேக் கட்டத்துக்குச் சென்ற அந்தச் செட்டை 7–6 என்ற கணக்கில் சின்னர் கைப்பற்றினார்அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் மெத்வதேவ் கடும் சவாலை ஏற்படுத்தினார்.
எனினும் அமைதியாகவும் துல்லியமாகவும் விளையாடிய சின்னர் மீண்டும் டைபிரேக் மூலம் 7–6 என்ற கணக்கில் அந்தச் செட்டையும் வென்றார்.இதன் மூலம் 7–6, 7–6 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவ்வை வீழ்த்திய ஜனிக் சின்னர், இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் பட்டத்தை தனது வாழ்க்கையில் முதல் முறையாக கைப்பற்றியுள்ளார்.