இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்.!
தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேரி கேர்ஸ்டன் இலங்கை தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நியமனம் 2026 ஏப்ரல் 15ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு 2008 முதல் 2011ஆம் ஆண்டு வரை மற்றும் தென்னாபிரிக்க தேசிய கிரிக்கெட் அணிக்கு 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரை தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதுடன், தென்னாபிரிக்க அணி 2013ஆம் ஆண்டு அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலும் உலக தரவரிசையில் முதல் இடத்தைப் பெற்றது.
1993 முதல் 2004ஆம் ஆண்டு வரை நீண்ட அவரது விளையாட்டு வாழ்க்கையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 14,087 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பின் கீழ், 2027ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் தயாரிப்புகளை வழிநடத்துவது அவரது முக்கியப் பொறுப்பாக இருக்கும்.
தேசிய உயர்திறன் பயிற்சி மையத்தின் அமைப்பை புதுப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நியமனம்மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.