இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தயாரான இந்தியா.!
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஏழு ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த வெற்றியின் மூலம் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.
இருபது ஓவர் உலகக் கிண்ண வரலாற்றில் இந்தியா பங்கேற்கும் நான்காவது இறுதிப்போட்டி இதுவாகும். தொடக்க உலகக் கிண்ணமான 2007ஆம் ஆண்டிலும், 2024ஆம் ஆண்டிலும் இந்தியா கிண்ணத்தை வென்றுள்ளது. அதேவேளை 2014ஆம் ஆண்டு இலங்கையுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
நேற்று மாலை ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியஇந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ஓட்டங்கள் குவித்தது. உலகக் கிண்ணத்தின் வெளியேற்ற சுற்றில் பதிவான அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இது அமைந்தது.
இந்திய அணியின் சார்பில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 89 ஓட்டங்கள் பெற்றார். மேலும் சிவம் டூபே 43 ஓட்டங்களையும் இஷான் கிஷான் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்னர் 254 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி வீரத்துடன் போராடியது. ஜேக்கப் பெத்தேல் 48 பந்துகளில் 105 ஓட்டங்கள் குவித்தார்.எனினும் 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் இங்கிலாந்து தோல்வியடைந்தது.
இந்திய பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா நான்கு ஓவர்களில் 33 ஓட்டங்கள் வழங்கி ஒரு விக்கெட்டை கைப்பற்றி சிறப்பாக செயல்பட்டார்.இரு அணிகளுக்கும் இடையேயான உலகக் கிண்ணத்தின் தொடர்ச்சியான மூன்றாவது அரையிறுதி போட்டி இதுவாகும். 2022ஆம் ஆண்டு அரையிறுதியில் இங்கிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதுடன், 2024ஆம் ஆண்டு அரையிறுதியில் இந்தியா 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.