சிவனடிபாத மலைக்கு அதிகளவில் யாத்திரிகர்கள் வருகை.!
கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிவனடிபாத மலை பருவகாலத்தில் டித்வா புயலின் காரணமாக யாத்திரிகர்கள் வருகை வீழ்ச்சி அடைந்தது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சிவனடிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் வருகை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, இன்று ஞாயிற்றுக்கிழமை, நாளை பௌர்ணமி தினம் என்பதாலும் அதிகளவில் யாத்திரிகர்கள் வருகை தந்த நிலையில் உள்ளனர்.
மேலும், யாத்திரிகர்கள் வருகை தந்த வாகனங்கள் நல்லதண்ணி நகரில் உள்ள தரிப்பிடங்களில் நிரம்பி நல்லதண்ணி மரே சாலையிலும் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான சாலையிலும் சுமார் ஆறு கிலோமீற்றர் தூரம் வரை நிறுத்தப்பட்டுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் நலன் கருதி அதிகளவான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் மதுபோதை மற்றும் போதைப்பொருட்கள் கொண்டு வரும் நபர்களை அடையாளம் காண வீதி தடை இட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் கூறினார்.
மலை உச்சிக்கு செல்லும் வழியில் அதிக அளவில் யாத்திரிகர்கள் செல்வதால் யாத்திரிகர்கள் வழிபட தாமதம் ஏற்படும் அபாயமும் உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.


