டி20 உலகக் கிண்ண சுப்பர் எட்டு தொடரில் பாகிஸ்தான் – இங்கிலாந்து இன்று மோதல்.!
டி20 உலகக் கிண்ணத்தின் சுப்பர்–8 சுற்றில் குழு இரண்டுக்காக பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (24) மோதுகின்றன.
கண்டி, பல்லேகல மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி, அரையிறுதி வாய்ப்பை அதிகரிக்க இரு அணிகளுக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் முதல் சுப்பர்–8 போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அந்த அணி ஒரு புள்ளியை பெற்றுள்ளது.
அதேவேளை, இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இரண்டு புள்ளிகளுடன் குழுவில் முதலிடத்தில் உள்ளது.இங்கிலாந்தின் நெட் ரன் ரேட் உயர்வாக இருப்பதால், இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றிபெற்றால் அரையிறுதி வாய்ப்பை பெரிதும் உறுதி செய்யக்கூடும்.
இரு அணிகளும் ஆரம்ப சுற்றில்சில தடுமாற்றங்களுக்குப் பிறகு தத்தமது குழுக்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சுப்பர்–8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.மேலும், இங்கிலாந்து அணி பல்லேகல மைதானத்தில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதேவேளை, பாகிஸ்தான் அணி தனது போட்டிகளை இலங்கையில் விளையாடினாலும், பல்லேகல மைதானத்தில் இன்று முதல் முறையாக களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.