லண்டனில் நாமலுக்குப் பேரிடி; ஒக்ஸ்போர்ட் உரையும் இரத்து.!
பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு பின்னடைவாக, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த அவரது விசேட உரையும் அதிகாரபூர்வமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தனது முடிவை அறிவித்துள்ளது.
இது குறித்து ஒக்ஸ்போர்ட் யூனியன் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த நிகழ்வில் பங்கேற்கவிருந்த மாணவர்கள் பலர் தங்களது பாதுகாப்பு மற்றும் சுதந்திரமாக கேள்விகளைக் கேட்கும் சூழல் குறித்து அச்சம் வெளியிட்டனர். ஒரு தரப்பினர் தங்களைப் பாதுகாப்பற்றதாக உணரும் ஒரு சூழலில் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுக்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
லண்டனில் உள்ள தமிழ் மாணவர் அமைப்புகள், தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகள் ஒன்றிணைந்து வழங்கிய கடும் அழுத்தம் மற்றும் திட்டமிடப்பட்டிருந்த பாரிய போராட்டங்கள் காரணமாகவே இந்த இரட்டைத் தடைகள் ஏற்பட்டுள்ளன.
உரைகள் இரத்துச் செய்யப்பட்ட போதிலும், நாமல் ராஜபக்ஷ மற்றும் அவருடன் சென்றுள்ள சாகர காரியவசம், மிலிந்த ராஜபக்ஷ ஆகியோர் லண்டனில் உள்ள ஏனைய மத வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் உள்ளூர் சமூகத்துடனான சந்திப்புகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.