உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நல்லூர் பிரதேச சபை தவிசாளரின் அறிக்கை.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
51 பார்வைகள்

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரான மயூரன் ஆகிய நான் பின்வரும் விடயங்கள் தொடர்பில் என்னுடைய விளக்கத்தினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

  1. நல்லூர் பிரதேச சபையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான தீர்மானம் தொடர்பில்.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரவினை அமுலாக்கம் செய்யக் கூடாது என்றும்; தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்க வேண்டும் என்று அண்மையில் நல்லூர் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில் தீர்மானம் ஒன்றினை இயற்றியமை தெரிந்த விடயம்.

குறித்த தீர்மானத்தின் மூலம் அரசு புதிய சட்டத்தினை கொண்டுவராமல் விடப்போவதும் இல்லை அதே நேரம் பயங்கரவாதச் சட்டத்தினை நீக்கப்போவதுமில்லை. ஆனால் மக்களினை குரல்வளையை நசுக்குகின்ற இவ்வாறான சட்டங்களுக்கு எதிராக எமது மக்கள் சார்பில் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது எமக்கான கடமை.

மேற்படி தீர்மானம் நல்லூர் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட பின்னர் குறித்த தீர்மானம் தொடர்பில் நல்லூர் பிரதேச சபையினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தேசிய மக்கள் சக்தியின் கௌரவ உறுப்பினர்கள் ஒரு ஊடக அறிக்கையினை வெளியிட்டு இருந்தனர்.

தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பிரச்சார மேடைகளிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதாக கூறியிருந்தனர். ஆனால் தற்போது அச் சட்டத்தினை விட கொடுமையான பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவினை கொண்டு வருகின்றார்கள்.

இச் சட்டமூலம் பயங்காரவாத சட்டத்தினை விடக் கொடுமையானது என்பது நன்கு கற்றறிந்த சட்டத்தரணிகள் மற்றும் கல்விப்புலன் சார்ந்தோர், ஆய்வாளர்களால் யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்பட்ட கருத்தரங்குகள் மூலம் வெளிக்கொணரப்பட்டது.

அதை விட குறித்த சட்டமூலம் சர்வதேச சட்டங்களுக்கு முரணாக காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் கவலை வெளியிட்டதுடன் ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதியிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவோம் என்று கூறி ஆட்சிப்பீடம் ஏறிய இவ் அரசாங்கத்தினைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற தேசிய மக்கள் சக்தியின் நல்லூர் பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள் அன்றைய சபை அமர்வின் போது நாட்டைப் பாதுகாப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் என்று கூறியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தாங்கள் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னர் ஒரு கதையும் பின்னர் மறு கதையும் கதைப்பது தொடர்ச்சியாக இந் நாட்டில் இடம்பெற்றுவருகின்ற ஒரு சம்பவம்.

அந்தவகையில் நல்லூர் பிரதேச மக்களின் வாழ்வியல் மற்றும் உட்டுகட்டுமான மேம்பாட்டுக்காக செயற்படுகின்ற நல்லூர் பிரதேச சபை எமது மக்களை ஒடுக்கும் முகமாக கொண்டு வருகின்ற இவ்வாறான சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் எழுப்பும்.

  1. கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் என்மேல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில்.
    திருநெல்வேலி பகுதியில் தனியார் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விளம்பர ஒலிபரப்புச் சேவையினை முன்அறிவித்தல் இன்றி நிறுத்தியதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளராகிய என் மேல் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஒலிபரப்புச் சேவையினை நிறுத்துமாறு கடந்த வருடம் டிசம்பர் மாதம் சபையில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு குறித்த தீர்மானம் ஒலிப்பரப்புச் சேவையினை மேற்கொள்ளுபவருக்கு அனுப்பியும் வைக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் குறித்த ஒலிபரப்புச் சேவையினை அவர் தொடர்ந்து கொண்டு வருவதனை கடந்த சபை அமர்வின் போது கௌரவ உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய போது குறித்த நபருக்கு அறிவித்து உரிய நடைமுறைகளைப் பின்பற்றி ஒலிபரப்புச் சாதனங்களை அகற்றுவதற்கு சபை தீர்மானித்தது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை சபை இன்னும் ஆராம்பிக்காத நிலையில் குறித்த நபர் நல்லூர் பிரதேச சபைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். டிசம்பர் மாதம் குறித்த விடயத்தினை நிறுத்துமாறு கோரி இன்று வரை சபைத் தீர்மானத்திற்கு மதிப்பளிக்காமல் குறித்த ஒலிபரப்புச் சேவையினைத் தொடருக்கின்ற நபர் மீது தான் நல்லூர் பிரதேச சபை பொலிஸ் முறைப்பாடு செய்ய வேண்டிய நிலையில் குறித்த நபர் என் மீது முறைப்பாடு செய்துள்ளார்.
  2. வெளிவாரிப் பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில்.
    நல்லூர் பிரதேச சபை வெளிவாரியாக ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கிய ஊழியர்களுக்கு மிகப் பெரிய தொகையினை வழங்கி வருவதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றார்கள். வெளிவாரியாக உள்வாங்கப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவு குறைவாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களுக்கான கொடுப்பனவுத் தொகையினை உரிய சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவும் உரிய நடைமுறைகளின் பிரகாரம் உயர்த்துவதற்கு கடந்த வருடம் யூன் மாதம் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு அத் தீர்மானத்திற்கு அமைய ஆகஸ்ட் மாதத்திலிருந்து குறித்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. குறித்த தீர்மானத்திற்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் ஆதரவளித்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் எமது மீள் சுழற்சி மையங்களில் கழிவுப் பொருட்களினை தரம் பிரிப்பதற்கென மேலதிக ஊழியர்கள் உள்வாங்கப்பட்டமை போன்ற செயற்பாடுகளினால் வெளிவாரி ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற மொத்தக் கொடுப்பனவுத் தொகை அதிகரித்துச் சென்றுள்ளது. ஆனால் யாருக்கும் நல்லூர் பிரதேச சபை தேவையில்லாமல் கொடுப்பனவுகளை வழங்கவில்லை. அவர்கள் செய்கின்ற பணிக்கு அவர்களுக்குரிய கொடுப்பனவுகளை உரிய முறைப்படி வழங்கி வருகின்றது.
  3. சபை அமர்வினைப் பார்வையிடுவதற்கு நல்லூர் பிரதேச சபை கொடுப்பனவு வழங்குவதாக கூறப்பட்டமை தொடர்பாக
    தேசிய மக்கள் சக்தியின் கௌரவ உறுப்பினர்கள் சபை அமர்பினை பார்வையிடுவதற்கும் நல்லூர் பிரதேச சபை கொடுப்பனவு வழங்கி வருவதாக பொய்யான தகவலிலைத் தெரிவித்து தங்களை சிறுமைப்படுத்தியுள்ளவர்கள். அவர்கள் கூறுகின்ற வரதராஜன் பார்த்திபன் என்னும் நபர் வெளிவாரி அடிப்படையில் அலுவலகப் பணியாளராக உள்வாங்கப்பட்டு பணிபுரிகின்றார். அவருக்கான அலுவலகக் கடமையுடன் என்னுடைய தனிப்பட்ட உதவியாளராகவும் கடமை ஆற்றிவருகின்றார். அவர் சபை நடவடிக்கையினை பார்வையிடுவதற்கு நல்லூர் பிரதேச சபை அவருக்கு கொடுப்பனவு வழங்கவில்லை. மாறாக ஏனைய வெளிவாரி பணியாளர்களுக்குரிய நடைமுறைபோல் அவர் தன்னுடைய பணிக்காக நல்லூர் பிரதேச சபைக்கு வரும் நாட்களுக்கு மட்டும் அவருக்கான கொடுப்பனவு நல்லூர் பிரதேச சபையினால் வழங்கப்படுகின்றது. குறித்த நபர் நல்லூர் பிரதேச சபையின் கழிவற்றலினை மேம்படுத்துவதற்குரிய ஜி.பி.எஸ் வசதிகளை ஏற்படுத்தல், வாகனங்களின் வழித்தடங்களை தினசரி ஆராய்ந்து அறிகையிடல், வாகன வழித்தடங்களை வரைதல், வட்டார வரைபடத்தினை வரைதல் மற்றும் இலத்திரனியல் மயப்படுத்தல், கண்காணிப்பு கமராக்கள் தொடர்பான விடயங்கள், எனக்கு வருகின்ற விடயங்களினை ஆவணப்படுத்துதல், நல்லூர் பிரதேச சபையின் தரவுகளினை ஒழுங்கமைத்தல், அதனை தரவுத் தளம் ஒன்றின் ஊடாக பேணுதல், நல்லூர் பிரதேச சபையின் ஊடகப்பிரிவு முகப்புத்தக தளத்தினை முகாமைத்துவம் செய்தல், என்னுடையதும் எமது கௌரவ உறுப்பினர்களினதும் கடிதங்களை வரைதல், எமது கௌரவ உறுப்பினர்கள் அவ்வப்போது கேட்கின்ற பணிகளினைச் செய்து கொடுத்தல் ஆகிய பணிகளுக்கு மேலதிகமாக அவ்வப்போது என்னாலும் நல்லூர் பிரதேச சபையினாலும் கொடுக்கப்படுகின்ற பணிகளினைச் செய்து வருகின்றார். அதற்குரிய கொடுப்பனவே குறித்த நபருக்கு வழங்கப்படுகின்றதே ஒழிய தேவையில்லாமல் குறித்த நபருக்கு மட்டுமல்ல வேறு எந்த நபருக்கும் நல்லூர் பிரதேச சபை கொடுப்பனவுகளைச் செலுத்தி நிதியினை வீண்விரயம் செய்யவில்லை.
  4. நல்லூர் பிரதேச மக்களின் வாழ்வியல் மற்றும் உட்டுகட்டுமான மேம்பாட்டுக்காக செயற்படுகின்ற நல்லூர் பிரதேச சபை தன்னால் இயன்ற பணிகளினை இயலுமானவரை வினைத்திறனாக செய்து வருகின்றது என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சுவர் இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயி@ரிழப்பு!

மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வீடு ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கட்டடச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

86 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி

மன்னார் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) மாலை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சமூக சேவைகள் திணைக்களமும் மன்னார்…

55 0 0
இலங்கை செய்திகள்

சிறீதரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு அர்ச்சுனா வலியுறுத்தல்

பநாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

73 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (06) பாடசாலையில் இடம்பெற்றது. அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில்…

69 0 0