மூன்று இலங்கை வீரர்கள் பி.எஸ்.எல். தொடரில் இணைப்பு.!
பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 11ஆவது பருவத்திற்கான வீரர்கள் ஏலம் நேற்று முன்தினம் (11) லாகூரில் நடைபெற்றது. 2016ஆம் ஆண்டு தொடங்கிய இந்த லீக் வரலாற்றில், முதல் முறையாக முழுமையான வீரர் ஏல முறை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஏலத்தின் மூலம் இலங்கையின் குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்க மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் குசல் மெண்டிஸ், இவ்வாண்டு ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரராக பதிவாகியுள்ளார். அவரை பெஷாவர் சல்மி அணி இலங்கை நாணயப்படி சுமார் 47 மில்லியன் ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.கடந்த ஆண்டு பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய குசல் மெண்டிஸ், பாதுகாப்பு காரணங்களால் தொடரின் நடுப்பகுதியில் நாடு திரும்பியிருந்தார். பின்னர் இந்திய பிரீமியர் லீக் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்திருந்தார். எனினும் இவ்வாண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.
அதேவேளை, குசல் ஜனித் பெரேராவை எச்.எச். கிங்ஸ்மன் அணி சுமார் 35 மில்லியன் ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. தசுன் ஷானக்கவை லாகூர் கலந்தர்ஸ் அணி 8.4 மில்லியன் ரூபாவுக்கு வாங்கியுள்ளது.கடந்த பருவத்தில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக குசல் பெரேரா முக்கிய பங்காற்றியிருந்தார். இறுதிப் போட்டியில் 202 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய அணிக்காக அவர் 31 பந்துகளில் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்கள் குவித்து வெற்றிக்கு துணை நின்றார்.தசுன் ஷானக்க இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டு பெஷாவர் சல்மி அணிக்காக பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.