நாங்கள் சஜித்தின் அடிமைகள் அல்லர்.!
நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமைகள் அல்லர் என்றும், அந்த அரசியல் கூட்டணியில் தாங்களும் ஒரு முக்கிய பங்காளிகள் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இருந்த முற்போக்குக் கொள்கைகளிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தற்போது விலகிப் பயணிப்பது தனக்குப் பெருத்த கவலையளிக்கின்றது என்றும் அவர் பகிரங்கமாகக் குறிப்பிட்டார்.
குருநாகலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்குவதற்காகக் கடந்த இரு முக்கிய தேர்தல்களிலும் தமது கட்சியின் ஆதரவாளர்கள் இரவும் பகலும் பாராது கடுமையாக உழைத்தனர் என்று நினைவூட்டிய அவர், பெருந்தொகை நிதியைச் செலவழித்து பொதுமக்களின் வாக்குகளைச் சேகரித்துக் கொடுத்தனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
அரசியலில் கூட்டணிக் கட்சியாக ஒரு கட்சியுடன் இணைந்து பயணிக்கத் தீர்மானிக்கும் போது, எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளோ அல்லது ஏனைய பொறுப்புகளோ வழங்கப்பட வேண்டும் என்பது வழமையான மரபாகும் என்றும் ரிஷாத் பதியுதீன் எம்.பி. தெரிவித்தார். இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவமானது தேர்தலுக்குப் பின்னர் செய்துகொண்ட உடன்பாடுகளையும் கொள்கைகளையும் மறந்து செயற்படுவது ஏமாற்றமளிக்கின்றது என்றும் அவர் கூறினார்.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆரம்பத்தில் வெறும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பயணத்தை ஆரம்பித்து, இன்று 159 உறுப்பினர்களாகத் தனது பலத்தை உயர்த்தியுள்ளமையை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இனவாதம் மற்றும் மதவாதமற்ற கொள்கை நிலைப்பாடும், நாட்டில் உண்மையான கட்டமைப்பு மாற்றம் ஏற்படும் என்ற மக்களின் நம்பிக்கையுமே அவரது இந்த அபார வெற்றிக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த ரிஷாத் பதியுதீன் எம்.பி., தற்காலிக பின்னடைவுகள் ஏற்படினும் அடிப்படைச் சரியான கொள்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டாம் எனத் தான் சஜித் பிரேமதாஸவிடம் நேரடியாகவே வலியுறுத்தினார் என்றும் கூறினார்.
இலங்கையின் கடந்தகால கசப்பான வரலாறு நாட்டு மக்களுக்குத் தெளிவான பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், இனவாதமும் மதவாதமும் இந்த நாட்டுக்கோ, சமூகத்துக்கோ அல்லது எதிர்கால சந்ததியினருக்கோ எவ்வித நன்மைகளையும் வழங்காது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் தமக்குத் தொடர்ந்தும் அதிருப்தியையே ஏற்படுத்தி வருகின்றது என்றும் ரிஷாத் பதியுதீன் எம்.பி. மேலும் சுட்டிக்காட்டினார்.


