வைத்தியசாலை மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.!
சடலத்தை உரிய முறையில் பாதுகாக்காமல், அடிப்படை வசதிகளற்ற இடத்தில் வைத்திருந்ததாக அச்சுவேலி வைத்தியசாலை நிர்வாகம் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு நேற்றைய தினம் புத்தூர், வாதரவத்தையைச் சொந்த இடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா ரவிதாசன் என்பவரால் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
சின்னராசா ரவிதாசன் என்பவரின் தாயார் கடந்த 16.10.2026 அன்று மாலை அவசர அம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் ஆவரங்கால் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவ நிலையத்திலிருந்து அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அவரும் அவரது சகோதரிகளும் உடனிருந்த நிலையில் கடமையில் இருந்த வைத்தியரினால் அவரது தாயாரின் சடலம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர், உயிரிழந்தவரின் சடலத்தைப் பார்வையிடுவதற்காக உறவினர்கள் வந்தபோது, சடலத்தைப் பார்வையிடுவதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்படவில்லை.
அத்துடன், அவரது தாயாரின் சடலம் அடிப்படை வசதிகளோ அல்லது குளிரூட்டி வசதிகளோ இல்லாத இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் இதனால் சடலம் மிகவும் மோசமான நிலையில் அடையாளம் காண்பதற்குச் சிரமமாக காணப்பட்டதுடன் 24 மணி நேரத்தின் பின் 17.10.2026 மாலை 04 மணியளவிலேயே சடலம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முக்கிய அம்சங்களாவன,
01.சடலத்தை உரிய முறையில் பாதுகாக்கத் தவறியமை.
இறந்தவரின் சடலத்தைப் பொறுப்பேற்று பராமரிக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினரால், சடலத்தை உரிய முறையில் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இது இறந்தவரின் கண்ணியத்தையும் குடும்பத்தினரின் உணர்வுகளையும் பாதிக்கும் செயலாகும்.
02.அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில் சடலத்தை வைத்திருந்தமை.
சடலத்தை உரிய குளிரூட்டி வசதிகளைக் கொண்ட இடத்தில் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறான வசதிகள் இல்லாத இடத்தில் சடலத்தை வைத்திருந்தமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
03: சடலத்தைப் பாதுகாப்பாகப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை.
சடலத்தைப் பொறுப்பேற்ற சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் அதனை உரிய வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைக்கு அல்லது பொருத்தமான பாதுகாப்பு வசதியுள்ள இடத்திற்கு மாற்றி, பாதுகாப்பாகப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
இறந்தவர் ஒருவரின் தாயார் என்பதையும், அவருடைய குடும்பத்தினரின் உணர்வுகளையும் கருத்திற்கொண்டு மனிதாபிமானத்துடன் செயற்பட்டிருக்க வேண்டும்.
04: சடலத்தை மோசமான நிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தமை.
சடலம் நீண்ட நேரம் உரிய முறையில் பாதுகாக்கப்படாததன் காரணமாக, மிகவும் மோசமான நிலையில் ஒப்படைக்கப்பட்டமை.
குறித்த நபரின் தாயாரின் சடலத்தை இவ்வாறான நிலையில் பார்ப்பதற்கு நேர்ந்தமை தமக்கும், குடும்பத்தினருக்கும் மிகுந்த மனவேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
இறப்பு என்பது இயற்கையான நிகழ்வாக இருந்தாலும், இறந்தவரின் சடலத்தை உரிய கண்ணியத்துடனும் மரியாதையுடனும் பாதுகாப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாகும்.
எனவே, இவ்விடயம் தொடர்பாகத் தகுந்த விசாரணையை மேற்கொண்டு, சம்பவம் நடைபெற்ற விதம், சடலம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் வசதிகள், சடலம் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டதா என்பன உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து, பொறுப்புடைய தரப்பினரைக் கண்டறியுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் வேறு எவருக்கும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் நீதியான தீர்வைப் பெற்றுத்தருமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.


